சிறுகதை: கஷ்டமர்
‘ஹலோ. இது என்ன மெனு கார்டு. நல்லாவே இல்லை. இந்த ஏரியாவுலே பெரிய பாஷ் ரெஸ்டாரெண்டுன்னு சொன்னாங்க. ஆனா மெனு கார்டுலேயே உங்க லட்சணம் தெரியுது. உங்க மேனேஜரை கூப்பிடுங்க’ என்று சர்வரிடம் சொன்னாள் ஸ்வர்யா.
டை கட்டிக்கொண்டு, ரொம்பவே டிப்டாப் ஆக இருந்த அந்த சர்வர் (அவன் இளைஞன் என்பதால் சர்வன் என்று சொல்லலாமோ?) சற்று திணறித்தான் போனான்.
’மே..மேடம். என்னாச்சு மேடம். சொல்லுங்க, எதுவானாலும் என்கிட்டே சொல்லுங்க மேடம்’
‘ஏன் உங்க மேனேஜர் வரமாட்டாரா?’
‘அப்படியெல்லாம் இல்லீங்க மேடம். மேனஜரும் ஓனரும் வெளிய போயிருக்காங்க. ரிசெப்ஷன் கேஷ்ல இருக்கிறது ஓனரோட சன். வீணா அவரை ஏன் கூப்பிட்டுகிட்டு? நீங்க தயவு செய்து இந்த மெனு கார்டுல என்ன பிரச்சினைன்னு சொல்லுங்க மேடம். நானே அதை டெஃபனெட்டா சரி செய்திடறேன்.
அவன் அப்படி மன்றாடியதும் ஸ்வர்யாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
‘சரி சரி. மெனுகார்டு விஷயம் இப்ப வேண்டாம். போய் இவங்க சொன்ன ஆர்டரையெல்லாம் எடுத்துட்டு வாங்க’
இவங்க என்று அவள் சொன்னது அவளைச் சுற்றி அமர்ந்திருந்த அவளது நண்பிகளைத்தான்.
‘மேடம். மெனு கார்டில் என்ன பிரச்சினைன்னே நீங்க சொல்லலீங்களே?’
‘அதப்பத்தி பேச வேணாம்னு நானே விட்டுட்டேன். அப்புறம் எதுக்கு நீங்க கேட்கறீங்க? போய் ஆர்டரை எடுத்துட்டு வாங்கன்னுதானே நான் சொன்னேன்’
‘மேடம். நீங்க உங்க ஆர்டரை சொல்லலியே.’
‘அட என்ன நீங்க வளவளன்னு? எனக்கு ஒரு வெஜிடபிள் பிரைட் நூடுல்ஸ்ஸும் கொஞ்சம் சாலட்டும்’
’சரீங்க மேடம்’, என்று சென்ற சர்வரின் முகத்தில் ‘அப்பாடா’ என்ற ஒரு எக்ஸ்பிரஷ்ஷன்.
சென்றவன் கேஷின் பின் பிஸியாக இருந்த வத்சனிடம் போய்த்தான் நின்றான்.
‘என்னடா ராகவ்?’ என்றான் வத்சன்.
‘ஏண்டா. ஹோட்டல் மேனேஜ்மெண்டு படிக்கிறதுக்கும் சர்வர் வேலை பார்கிறதுக்கும் என்னடா சம்மந்தம்?’ - இது அந்த சர்வராகிய ராகவ்.
‘எத்தனை தடவைடா இந்த கேள்வியை கேட்ப? இரு எங்கப்பாவும் உங்கப்பாவும் வந்திடட்டும். அவங்களையே கேட்டுடு?’
‘யாரு, இந்த ஓட்டல் ஓனரும் மேனஜருமா?’
‘ம்ம். அப்படியும் சொல்லலாம். இல்லை என் அப்பாவும் உன் அப்பாவும்ன்னு சொல்லலாம்’
‘இந்த ரெண்டு பெருசுங்களும் ஒரு மார்கமாகத்தான் இருக்காங்க. "ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிச்சிட்டுருக்கிற என்னைப்பார்த்து, சம்மர் லீவுல ஊருக்கு வந்ததும் இங்க பார்ட்டைம் ஜாப்ல சேர்ந்திடு"ன்னு உங்கப்பாவும் எங்கப்பாவும் சொன்னபோதே இதுல ஏதோ வில்லங்கம் இருக்கும்னு தோணுச்சு. என்னடா வேலை இது?’
‘டேய் ரொம்ப அலுத்துக்காதே? சர்வர் வேலையிலிருந்து ஆரம்பித்தாதான் பொறுமை நிதானம்னா என்னன்னு தெரியவரும்னு எங்கப்பாவும் உங்கப்பாவும் சொல்லுவாங்க. அதனால தான் உன்னை இந்த வேலையிலுருந்து ஆரம்பிக்க வைச்சிருக்காங்க. இதுக்கு போய் அலுத்துக்கிறியே? இப்போ பாரு நானும்தானே இங்க வேலை செய்துகிட்டிருக்கிறேன்?’
‘உனக்கென்ன. ஜாலியா கேஷில் இருக்கே? நாந்தானெ அங்க கஸ்டமர்ஸ்கிட்டே அல்லாடிக்கிட்டிருக்கேன்?’
‘ஜாலியா கேஷில் இருக்கேனா? ஹலோ நண்பா! போனா வருஷம் வரைக்கும் எவ்ரி சம்மர் நானும் சர்வராகத்தான் வேலை செய்தேன். இதோ இப்போ ஃபைனல் இயர் முடிச்சிட்டதால என்னை கேஷுக்கு ஹெல்ப்பண்ண எங்கப்பா கூட்டிருக்கிறார். அது சரி, கஸ்டமர்ஸ் கிட்டே அல்லாடிகிட்டுருக்கியா? மத்த சர்வரெல்லாம் அப்படி சொல்லலியே?’
‘ம்ம்? மத்தவங்களுக்கு வாய்ச்சது கஸ்டமர்ஸ். எனக்கு வாய்ச்சிருக்கிறது கஸ்டமர் இல்லை. கஷ்டமர். அதாவது ரொம்ப கஷ்டமான கஸ்டமர். மேல ஸெகெண்ட் ஃபுளோர்ல என் டேபிள்ல ஒரு காலேஜ் பொண்ணுங்க கும்பல் ஒண்ணு இருக்கு. மொத்தம் ஆறு பொண்ணுங்க. அதுல ஒரு பொண்ணு, ஷீ லுக்ஸ் வெரி டீஸ்ண்ட தான். ஆனா என்ன கோபமோ தெரியலை, மெனு கார்டு நல்லா இல்லைன்னு ஒரு சண்டை’
‘என்னா நல்லா இல்லை?’
‘சொன்னாத்தானே தெரியும்? அதையும் சொல்லலை. ஸ்ரெயிட்டா மேனஜரைக்கூப்பிடுன்னு ஆர்கியூமெண்ட்?’
‘சரீடா, பொறுமையா ஹாண்டில் பண்ணு. முடியலைன்னா நெக்ஸ்ட் டைம் என்னைக் கூப்பிடு. நான் வந்து, இந்த மாதிரி டஃப்ஃபான கஸ்டமர்ஸ்ஸை எப்படி பொறுமையா ஹாண்டில் பண்றதுன்னு உனக்கு காட்றேன்.’ என்றான் வத்சன். அதாவது அந்த ஓட்டலின் ஓனராகியவரின் மகன்.
‘என்னவோ போடா. சரி. நான் கிச்செனுக்கு போறேன். ஆர்டரை சொல்லனும். அதுக்குள்ள அந்த பொண்ணு என்ன கூப்பாடு போடப்போதோ’ - என்றபடியே கிளம்பினான் ராகவ் எனப்படும் அந்த சர்வராகிய, அந்த ரெஸ்டாண்டின் மேனஜரின் மகன். இருவரும் சின்னவயதிலிருந்தே திக் ஃபிரண்ட்ஸ்.
அந்தப்பெண் ஸ்வர்யா..! படபடவென்று பேசுவதோ, மற்றவரிடம் சண்டைப்போட்டு பேசுவதோ அவள் இயல்பல்ல.
‘ஏய். என்னடி ஆச்சு உனக்கு. ஏன் அந்த சர்வரைப் போய் அந்த மாதிரி கடிச்சி குதறினே?’
’நான் ஒண்ணும் யாரையும் கடிச்சிக்குதறலை’
‘உனக்கு மூட் அவுட்டுன்னா இப்படித்தான் பண்றதா?’
இப்போது ஸ்வர்யாவின் மற்றொரு தோழி பேச்சில் நுழைந்தாள்.
‘மூட் அவுட்டா? என்னாச்சு?’
‘ம்? அது ஒரு பெருங்கதை. அதை இப்போ சொல்ல முடியாது’
‘பரவாயில்லை, அதையே சுருக்கி ஷார்ட்டா எஸ் எம் எஸ் மாதிரி சொல்லு. நாங்க புரிஞ்சிக்கிறோம்’
ஒரு பெருமூச்சுடன் ஸ்வர்யா பேச ஆரம்பித்தாள்.
‘நம்ப ஒரிஜினல் பிளான்படி நாம்ப ஸத்யம் காம்ப்ளெக்ஸில் மீட் பண்றதா இருந்திச்சில்லே?’
‘ஆமாம். திடீர்னு கடைசி நேரத்துல நீ அதை மாத்தி அங்கேயிருந்து அடையார்ல இருக்கிற இந்த ரெஸ்டாரெண்டுக்கு, நீ எங்களை உன் இன்னொவா மினிவேன்லியே கூட்டிகிட்டு வந்திட்டே? நீதான் இந்த ரெஸ்டாரெண்டுக்கு போகலாம்னு அடம் பிடிச்சே. அப்புறம் இங்க வந்ததுக்கப்புறம் மெனு கார்டு நல்லாயில்லை, அது நல்லாயில்லை, இது நல்லாயில்லைன்னு, வொய் திஸ் மூட் அவுட் யா?’
‘மூட் அவுட்டுக்கு ரீஸன் இருக்கு. என்னோட ஒரிஜினல் பிளான்படி, ஸத்யத்துல நாம்ப மீட் பண்ணும்போது, உங்களுக்கு சர்ப்ரைஸ்ஸா ஒருத்தரை இண்ட்ரொடியூஸ் பண்ணலாம்னு இருந்தேன். ஆனா அந்த லூஸு கடைசி நேரத்துல வரலைன்னு சொல்லி பிளானை கேன்ஸல் பண்ணிடுச்சு’
‘யாருடி அந்த லூஸு?’
‘ஓய். அவனை லூஸு கீஸுன்னு நான் மட்டும்தான் சொல்லலாம். நீங்க சொல்லக்கூடாது’ சிரித்தாள் ஸ்வர்யா.
‘ஹேய். என்ன டிராக் வெற மாதிரி போகுது. சரி யாருடி அவன்?’
‘என் காதலன்’ சிறிதே வெட்கினாள் ஸ்வர்யா.
உடனே நண்பிகளிடமிருந்து பலவித காமெண்ட்ஸ். உற்சாகத்துடன். ‘வாவ்’..’கங்கிராட்ஸ்டி’..’சூப்பர். தமிழ்ல என்னவோ சொல்லுவாங்களே. இந்த பூனை கூட ட்ரிங்க்ஸ் குடிக்குமான்னு? அந்த மாதிரி ஸைலெண்டா இருந்திட்டு இப்போ என்ன காரியம் பன்ணியிருக்கா பார்’
‘அடியே. அது இந்த பூனை கூட பால் குடிக்குமா? ட்ரிங்க்ஸ் கிடையாது’
‘சரீடி. ஒரு ஆர்வத்துல உளறிட்டேன். சரி எப்போ உன் பாய்ஃபிரண்டை இண்ட்ரொடியூஸ் பண்ணப்போறே?.’
‘அவனை என் பாய்ஃபிரண்டுன்னு சொல்ல மாட்டேன்’
‘என்னடி சொல்றே?’
‘ஆமாம்டீ. இந்த பாய்ஃபிரண்டு, லவ்வர், அப்படி இப்படீன்னு சொன்னா அது ஒரு மேலோட்டமான ரிலேஷன்ஷிப்னு எனக்கு தோணுது. இவன் என் காதலன். என் உயிரானவன். இந்த உறவை தமிழ்ல சொல்லும்போது அதுல ஒரு ஆனந்தம் இருக்குடீ’ என்றாள் ஸ்வர்யா.
‘அம்மா டீச்சர். இந்த தமிழ் கிளாஸெல்லாம் போதும். உன் பாய்ஃபிரண்டை ..அஹ்..அதான்..உன் காதலனை எப்போ எங்களுக்கு இண்ட்ரொடியூஸ் பண்ணப்போறே?’
‘அதுக்குத்தான் அவனை ஸத்யம் வரச்சொல்லியிருந்தேன். அவன் என்னடான்னா, கடைசி நேரத்துல அவங்கப்பா அவனுக்கு எதோ முக்கியமா வேலை கொடுத்திட்டாராம். அதானால் வரமுடியலைன்னு சொல்லிட்டான். பட் நான் சீக்கிரமே அவனை உங்களுக்கு இண்ட்ரொடியூஸ் பண்றேன்’
‘எப்போ?’
‘கண்டிப்பா, நீங்க எதிர்பார்க்கிறதை விட சீக்கிரமா?’
அப்போது அவர்கள் சொன்ன ஆர்டர்கள் வர ஆரம்பித்தது. கூடவே ராகவ்வும்.
டேபிள் முழுவதும் டிஷ்ஷஸ். அவைகளை கொண்டுவந்து அழகாக வைத்துவிட்டு தன்னை நோக்கிய டேபிள்-பாய்ஸ் ஐ நோக்கி ‘ஓகே’ என்று சைகை செய்து அனுப்பினான்.
பிறகு பெண்களை நோக்கி ‘எவ்ரிதிங் ஓகே மேடம்?’ என்றான்.
அனைவரும் ஓகே என்றனர். ஆனால் ஸ்வர்யா மட்டும் பதில் சொல்லாமல் ‘ஃபிரைட் நூடுல்ஸ்ஸையே’ பார்த்துக்கொண்டிருந்தாள்.
‘எனி பிராப்ளம் மேடம்?’ என்றான்.
’என்ன ரெஸ்டாடெண்ட் இது. போய் உங்க மேனஜரை...ஆங்..அவர்தான் இல்லைன்னு சொன்னீங்க இல்லை?’
‘ஆமாம் மேடம். ரிஸப்ஷன் காஷ்ல ஓனரோட சன் தான் இருக்கிறாரு’
‘போய் அவரை கூட்டிகிட்டு வாங்க. என்ன ஃபுட் இது?’
‘மேடம் என்ன பிராப்ளம்ன்னு சொன்னீங்கன்னா..’ என்று ராகவ் இழுத்தான்.
‘உங்களை ஸ்கோல்ட் பண்ணி எனக்கு என்ன பிரயோஜனம்? நீங்க இங்க வேலை செய்யறவர் தானே? நீங்க போய் முதல்ல அவரை வரச்சொல்லுங்க. அவரையே திட்டிக்கிறேன்’
‘சரீங்க மேடம்’ ராகவ் எஸ்கேப் ஆனான்.
‘நல்ல வேளை நான் தப்பிச்சேண்டா சாமீ.’ என்றபடியே வத்ஸனிடம் வந்தான். ‘வத்ஸா, உன் கஸ்டமர் ஸ்கில்ஸ்ஸை காட்டறதுக்கு சான்ஸ் வந்திடுச்சு. நான் சொன்னேனில்லே, அந்த ஸெகண்ட் ஃபுளோர் டேபிள். அவங்க உன்னை கூப்பிடராங்க. வாடா’
‘ஏண்டா, இப்போ என்ன பிராப்ளம்?’
‘யாருக்கு தெரியும்? வாடா. நானும் கூட வர்றேன்’
‘சரீ’ என்றபடியே ராகவ்வுடன் நடக்கத்தொடங்கினான்.
அந்த டேபிள்.
’இப்போ என்னாடி ஆச்சு உனக்கு’ என்று ஸ்வர்யாவை கேட்டுக்கொண்டிருந்த தோழிகள் தங்களை நோக்கி அந்த சர்வரும், அவன் கூட இன்னொரு இளைஞனும் வருப்வதை பார்த்து ஸைலெண்ட்டாகினர்.
வந்து நின்றதும், ராகவ் பவ்யமாக சொன்னான் ‘திஸ் ஈஸ் மிஸ்டர் வத்ஸன். ஹீ ஈஸ் த சன் ஆஃப் திஸ் ரெஸ்டாரெண்ட் செயின்ஸ் ஓனர்’
வத்ஸன் அந்த பெண்கள் அனைவரையும் கூர்ந்து பார்த்தான். அவன் அப்படி பார்ப்பதை, ராகவ் நோட் பண்ணிக்கொண்டான். ‘முகத்தை பார்த்தே அவங்க குணத்தை கண்டுபிடிக்கிறானோ?’
‘ஹாய் ஹவ் ஆர் யூ’ என்று அனைத்து பெண்களையும் பார்த்து சொன்னவன், கரெக்டாக ஸ்வர்யாவை நோக்கி ‘என்ன பிராப்ளெம் மேடம்’ என்றான்.
ராகவ் அசந்து போனான். அது எப்படி இந்தப்பெண் தான் பிராப்ளம் கொடுக்கிற பெண் என்று கரெக்டாக கண்டுபிடித்தான். இவள்தான் என்று நான் சொல்லவேயில்லையே. முகத்தை வைச்சே யூகித்துவிட்டானே. நிஜமாலுமே கில்லாடிதான் நம்பாளு என்று எண்ணிக்கொண்டான்.
‘எவ்ரி திங் ஈஸ் பிராப்ளெம்’ என்று சொன்னாள் ஸ்வர்யா.
‘ஒண்ணு ஒண்னா சொல்லுங்க மேடம். ஐ வில் ட்ரை டு ஃபிக்ஸ் தெம்’ என்றான்.
‘சரி. டு ஸ்டார்ட் வித், இது என்ன நூடுல்ஸ். ஒரே எண்ணையா இருக்கு?’
‘ஒரே எண்ணையா?’
‘ஆமாம். ஒரே எண்ணையா இருக்கு’
சிறிது யோசித்த வத்ஸன் பிறகு சிறிய புன்சிரிப்போடு ‘நூடுல்ஸ்ஸுக்கு ஒரே எண்ணை தாங்க நாங்க யூஸ் பண்றோம். உங்களுக்கு வெணும்னா சொல்லுங்க, இன்னும் ரெண்டு மூணு எண்ணையை சேர்க்க சொல்றேன். பர்டிகுலரா தேங்காயெண்ணை, விளக்கெண்ணை வேணுங்களா மேடம்’ என்றான்.
இப்போது அதிர்ந்த்து அந்தப் பெண்கள் மட்டுமல்ல, ராகவ்வும் தான். ’இது என்ன மாதிரி கஸ்டமர் ஸ்ப்போர்ட்? இந்த மாதிரி பேசினா அந்த பெண்களுக்கு கோவம் வராதா?’ என்று தனக்குள்ளே எண்னிக்கொண்டான்.
’என்னங்க இப்படீ ரூடா பதில் சொல்றீங்க?’ தோழிகளில் ஒருத்தி ஆரம்பித்தாள்.
‘நீ சும்மா இருடீ. லெட் மீ ஹாண்டில் ஹிம்’ என்று ஸ்வர்யா அவளை தடுத்தாள். பிறகு வத்சனை நோக்கினாள்.
’மிஸ்டர். இந்த தேங்காயெண்ணை விளக்கெண்னையெல்லாம் போதாது. கூடவெ கொஞ்சம் கெரொஸீனும் சேர்த்து கொண்டுவாங்க’
‘டீ என்னடீ’
‘சும்மா இருங்கடீ. அப்புறம் இது என்ன? இதுதான் ‘பேப்பர் தோசையா?’ பேப்பர் தோசைன்னா அழகா மெல்லிசா இருக்கனும். இது ரொம்ப மொத்தமா, குண்டா இருக்கு?’ என்று வத்ஸனைப் பார்த்து வேகமாக சொன்னாள்.
ராகவ் அந்த பேப்பர் தோசையை பார்த்தான். அவனுக்கென்னவோ அது மெல்லிசாக இருக்கிறமாதிரிதான் தோன்றியது. வத்ஸன் என்ன சொல்லப்போறானோ?
‘தோசை குண்டா இருக்குன்னா சொல்றீங்க மேடம்?’ வத்ஸன் பொறுமையாக கேட்டான்.
‘ஆமாம்’
வத்ஸன் அங்கிருந்த படியே கையை தட்டி ஒரு டேபிள்-பாய் ஐ கூப்பிட்டான்.
‘ஏய் இங்க வா. இந்த தோசை ரொம்ப குண்டா இருக்காம். இதைக்கொண்டுப்போய் பக்கத்து ஜிம்ல இருக்கிற டிரெட் மில்ல ஒரு அரை மணி நேரம் ஓடவிட்டு கொண்டுவா. அப்போவாவது இந்த குண்டு தோசை இளைக்குதான்னு பார்ப்போம்’
டேபிள்-பாய் முழித்தான். ராகவ்வுக்கோ மயக்கம் வராத குறை.
’என்னங்க இப்படீ திரும்ப திரும்ப ரூடா பதில் சொல்றீங்க?’ இப்போது தோழிகளிள் இரண்டு பேர் வேகமாக சொன்னனர்.
‘நீங்க சும்மா இருங்கடீ. லெட் மீ ஹாண்டில் ஹிம்’ என்று மீண்டும் ஸ்வர்யா அவர்களை தடுத்தாள். பிறகு வத்சனை நோக்கினாள்.
’சரீ. டிரெட் மில்லுல ஓடவிட்டுவிட்டு அந்த தோசையை கொண்டுவாங்க. அப்புறம் இதென்ன’ என்று ஆப்பிள் ஜூஸ்ஸைக் காட்டிக்கேட்டாள்
‘ஆப்பிள் ஜூஸ் மேடம். அதிலேயும் ஏதாவது பிரச்சினையா?’ என்று வத்சன் கேட்டான்.
‘ஆமாம். அதுல உப்பு பத்தலை’ என்று வேகமாக சொன்னாள் ஸ்வர்யா.
என்னது, ஜூஸில் உப்பா. அசந்துப்போனான் ராகவ். ஆனால் வத்ஸன் கொஞ்சமும் அசரவில்லை.
’டேய் தம்பீ. இந்த ஆப்பிள் ஜூஸை கிச்செனுக்கு கொண்டுபோய் அதுல கொஞ்சம் உப்பை போடு. அப்புறம் கூடவே கொஞ்சம் ஜிஞ்சர் பூண்டு மிளகாய் போட்டு அப்படியே தாளிச்சி எடுத்திட்டு வா?’ டேபிள்-பாய் ஐ பார்த்து பொறுமையா வத்ஸன் சொன்னான்.
இப்போது ராகவ்வுக்கு லேசாக தலை சுற்றுகிற மாதிரி இருந்தது. வாயைவிட்டே சொலிவிட்டான் ‘வத்ஸா. போதும். நீ கெஷுக்கு போ. நான் இவங்களை ஹாண்டில் பண்ணிக்கிறேன்’
’இல்லைடா, இந்த பொண்ணை நானே பார்த்துக்கிறேன்’ என்றான் வத்ஸன்.
பொண்ணா? ராகவ் நொந்தேபோனான். கஸ்டமரைப்போய் யாராவது இந்தப்பெண் என்றோ அல்லது இந்தப்பையன் என்றோ அட்ரஸ் பண்ணுவாங்களா?
’ஹலோ. என்ன பொண்ணு கிண்ணுன்னு சொல்றீங்க. விட்டா அவ இவ ந்னு சொல்லுவீங்க போல’ படபடத்தாள் ஸ்வர்யா.
‘ம் சொல்லுவேனே. அதுவும் உன்னைப்பார்க்கும் போதெல்லாம் சொல்லுவேன். அப்படி சொல்ல எனக்கு உரிமையிருக்கு?’
இப்போது தோழிகள் அனைவரும் ‘ஸ்பைவேர் இருக்கிற வெப்சைட்டுக்கு போன இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் போல’ ஹாங் ஆகி நின்றனர்.
ராகவ்வோ ஒரு படி மேலேபோய் ஏதோ பினாத்திக்கொண்டே குழம்பி நின்றான். ’என்ன தான் நம்ப ரெஸ்டாரெண்டுக்கு கஸ்டமர்ன்னு வந்தாலும், அவங்களை நீ, வா, போன்னு சொல்றதுக்கு நமக்கு உரிமை இருக்கா என்ன? இது எந்த ஹோட்டல் மேனேஜ்மெண்ட் புக்ல இருக்கு.
ஒருவேளை ஃபைனல் செமஸ்டர் புக்ல இருக்கோ என்னவோ? வத்ஸனும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிச்சவந்தான். ஆனால் அவன் போன வருஷமே படிப்பை முடித்துவிட்டான். ராகவ் இப்போதுதான் ஃபைனல் இயர் போகப்போகிறான்.
இவ்வாறு தோழிகள் அனைவரும் அசந்துபோனாலும், ஸ்வர்யா அசரவில்லை.
‘ஒரு மண்ணாங்கட்டி உரிமையும் கிடையாது. அதுவும் கண்டிப்பாக உனக்கு ‘ என்றாள்.
‘அது ஏன்?’
‘பின்ன? ஸத்யத்துக்கு வரேன்னு சொல்லிட்டு கடைசியில வரமுடியாதுன்னு கேன்ஸல் பண்னினவங்களுக்கு அந்த உரிமை கிடையாது’ என்று சிணுங்கினாள்.
’அதான் சொன்னனே. எங்கப்பா எதோ அவசரமாக வெளிய போகணும்னு சொல்லிட்டு என்னை இந்த ரெஸ்டாரெண்டை பார்த்துக்க சொல்லிட்டாருன்னு. ஆனா நீ இங்கேயே வருவேன்னு நான் நினைக்கிலை. என்னதான் நான் இங்க இருந்தாலும் என் நினைப்பெல்லாம் உன்னையே சுத்திகிட்டு இருந்திச்சு தெரியுமா?’
‘ஹேய்..ஹேய்..ஹோல்டான்..ஹோல்டான்’ இங்கே என்ன நடக்குது என்று தோழிகள் விழிபிதுங்கினர். கூடவே ராகவ்வும் சேர்ந்துக்கொண்டான்.’என்னடா நடக்குது?’
’ராகவ், திஸ் ஈஸ் ஸ்வர்யா. என் காதலி. என் உயிரானாவள், என் இதயத்தை முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டிருப்பவள்’ சிரித்துக்கொண்டே சொன்னான் வத்ஸன்.
‘வாவ். இவங்கதான் அந்த ஸ்வர்யாவா?’
ஸ்வர்யா சிரித்தாள் ‘சாரீங்க. உங்களுக்குத்தான் நான் தொந்திரவு கொடுத்திட்டேன்.’ என்று ராகவ்வை பார்த்து சொன்னவள் தன் தோழிகளை நோக்கி ‘கேர்ள்ஸ், மீட் மை காதலன். வத்ஸன்’.
‘அடிப்பாவி. இதுக்குதான் எங்களை ஸத்யத்துலேயிருந்து இங்கே இழுத்துகிட்டு வந்து இந்த ஆட்டம் போட்டியா?’
’ஆமாம். ஆனா பாவம் இந்த ராகவ். நடுவுல மாட்டிக்கிட்டு நல்லா முழிச்சாரு?’
‘பரவாயில்லைங்க’ என்ற ராகவ், தன்னை ஆசுவாசபடுத்திக்கொண்டே, கழுத்திலிருந்த டையை லூஸ் பண்ணிக்கொண்டே அருகில் இருந்த சேரை இழுத்துப்போட்டு அவர்கள் அருகில் உட்கார்ந்தான்.
’என்னடா ராகவ். கஸ்டமர்ஸ் கூட இப்படி சேர்ல உட்காரலமா?’ என்று கிண்டலாக சிரித்துக்கொண்டே வத்ஸன்.
‘போடா, கஸ்டமர் சப்போர்டைப்பத்தி நீ பேசாதே? போடா போ. போய் எனக்கு ரெண்டு ஆப்பிள் ஜூஸ் கொண்டுவா’ என்றான்.
அனைவரும் சிரித்தனர்.
By
Sampath
Comments
Post a Comment