கவிதை: வானம் புதிது
(சும்மா, ஒரு தத்துவ பாடல் எழுதனும்னு தோணுச்சுங்க. அதுக்கு நமக்கு தகுதியிருக்கான்னு தெரியலை. இருந்தாலும் முயற்சி பண்ணியிருக்கேன்.
‘சிகரெட் பிடிக்காதே’ன்னு ஒரு ‘டீ டோட்டலர்’ சொன்னாலும் சரி, இல்ல, ஒரு ‘செயின் ஸ்மோக்கர்’ சொன்னாலும் சரி. மேட்டர் ஒண்ணுதானுங்களே! அதனால தத்துவப்பாடல் எழுதுற அளவுக்கு நீ என்ன பெரிய ஆளான்னு கேட்ககூடாது. அப்புறம் அழுதுபுடுவேன் அழுது. ஜாக்கிறதை!)
இப்போ பாடலுக்கு வருவோம். இந்த வானத்தையும் பூமியையும் பாருங்க. நேத்து ராத்திரிதான் இடி மழைன்னு தூள் பண்ணியிருக்கும். ஆனாலும் மறுநாள் புதுசா அழகா விடியும் பாருங்க, அதாவது நேத்து நடந்ததை மறந்திட்டு புதுசா வாழ்க்கைய ஆரம்பிக்கிற மாதிரி!. அதுல ஏதோ ஒரு தத்துவம் இருக்கிற மாதிரி தோணுதுங்க. இதைப் பாட்டா சோறுவடிச்சி கஞ்சி காய்சிருக்கேங்க)
”வானம் புதிது பூமி புதிது
வாழ்க்கையை புதிதாய் நீ மாற்றடா
வையகத்தில் விழுந்தவன் மீண்டும்
எழுந்திட வழியுண்டு நீ பாரடா
இருளை கடந்தால் வெளிச்சம் வருமே
கடந்து பார்த்தவன் சொன்னானடா
பாதிவழியில் பயந்து நின்றால்
வாழ்வே இருளாகி போகுமடா
ஆஹா! உண்மை இதனை நீ பாரடா
தர்மம் செய்தால் பிறரை வாழவைத்தால்
ஊர் உன்னை இதயத்தின் தெய்வமாக்கும்
விடா முயற்சியுடன் கடும் உழைப்பிருந்தால்
ஊர் உன்னை தலைவனாய் ஏற்று நிற்கும்
கண்கள் ரெண்டையும் மூடிக்கொண்டு
இருட்டென்று சொல்லாதே
கால்கள் ரெண்டிலும் வேகமிருந்தால்
தூரங்கள் இருக்காதே
இதனை புரிந்துக்கொண்டால்
உண்மை அறிந்துக்கொண்டால்
எந்த நிலையிலும் போராடலாம்
ஆஹா! வெற்றி உனதென்று
நீ வாழலாம்
(வானம் புதிது..)
நம்பிக்கை கொள் தன்னம்பிக்கை கொள்
தடைகளை உடைத்திங்கு அது எறியும்
நல்ல பண்புடனே தெய்வ அன்பிருந்தால்
உந்தன் பின்னே ஊர் நிற்கும்
அது உந்தன் தலைமைக்கு காத்து நிற்கும்
அனுபவம் வாய்ந்த பெரியவர் சொல்லை
என்றும் தட்டாதே
ஆனால் உந்தன் வாழ்வுதனையே
அவர் கையில் தராதே
அவரைக் கலந்துக்கொண்டு
உண்மை அறிந்துக்கொண்டு
சொந்தமாக முடிவெடுத்தால் அதில்
துன்பம் நேர்ந்தாலும் இன்பமடா
ஆஹா! வானம் புதிது பூமி புதிது
வாழ்க்கையை புதிதாய் நீ மாற்றடா
வையகத்தில் விழுந்தவன் மீண்டும்
எழுந்திட வழியுண்டு நீ பாரடா
இருளை கடந்தால் வெளிச்சம் வருமே
கடந்து பார்த்தவன் சொன்னானடா
பாதிவழியில் பயந்து நின்றால்
வாழ்வே இருளாகி போகுமடா
ஆஹா! உண்மை இதனை நீ பாரடா
(இதில் தமிழகத்தை சேர்ந்த நான்கு விஐபிகளின் பிளெஸ் பாயிண்டுகளை தொட்டிருக்கிறேன். அவர்கள் யாரென்றும், எந்த வரிகளில் அவர்களை ரெஃபர் பண்ணியிருக்கிறேன் என்றும் கண்டுபிடித்தால் சொல்லுங்கள்)
சம்பத்
Comments
Post a Comment