சிறுகதை: பாட்டுத்தலைவன் பாடினால்..!
சனிக்கிழமை காலை எட்டரை மணி. வீடே முழித்திருந்தாலும் பொறுமையாக எழுந்து, மிகப்பொறுமையாக பல்துலக்கி விட்டு அப்புறம் மனைவி கையால காபி வாங்கி குடிப்பது சூப்பர்ங்க. ஆனா அதை விட சூப்பரா இன்னொரு விஷயம் இருக்குங்க.
அதாவது, அந்தக் காபியெல்லாம் குடிச்ச பிறகு, குளிக்கிறதுக்கு டவலை எடுத்துக்கிட்டு, பாத்ரூம் போய் ஷவருக்கு கீழ நின்னுக்கிட்டு, சும்மா ஜில்லுன்னு தண்ணியை தொறந்து விட்டா, தண்ணி மட்டுமா பொத்துக்கினு வரும்? கூடவே என்னோட இசைஞானமும் பிச்சிக்கிட்டு வரும்..பாருங்க..ச்சே..பேரானந்தம்ங்க.
தண்ணிக்கடியில நின்னுக்கிட்டு கண்ணை மூடினா போதுமுங்க, விதவிதமா பாடல்கள் அப்படியே என் மனசுலேந்து அருவி மாதிரி கொட்டுமுங்க. ஆனா வார்த்தைகள் தான்..ரொம்பவே முட்டுமுங்க. அதுக்காக பாடறதை விட்டுட முடியுங்களா? ஏன்னா இது அதையும் தாண்டி புனிதமானதாச்சுங்களே? ’லலல்லா..னனன்னா..தனன்னனன்ன’ல்லாம் போட்டு விடுபட்ட மற்றும் கோடிட்ட வார்த்தைகளை நிரப்பிடுவேங்க.
ஆனாலும் இந்த உச்சஸ்தாயில..அட..அதாங்க..ஹைபிட்ச்சில பாடும்போதுதான் கொஞ்சம் பிரச்சினை. நம்ப தொண்டை ரொம்பவே ‘மக்கர்’ பண்ணும். அதுக்காக பாடறதை விட்டுட முடியுங்களா? கண்டிப்பா முடியாதுங்க. ஏன்?
ஏன்னா அதுக்கு காரணம் சில மாதங்களுக்கு முன்பு நான் கண்ட ஒரு கனவுதாங்க. அது ஒரு பகல் கனவுதாங்க. ராத்திரி கண்ட கனவு கிடையாதுங்க. அந்தக் கனவைப் பத்தி சொல்றதுக்கு முன்னாடி, எந்த மாதிரி சிச்சுவேஷன்ல அந்த கனவு வந்துச்சுன்னு சொல்றேன்..கேளுங்க.
(இப்போ ஒரு சிச்சுவேஷன் ஓபனிங் மியூசிக்கை போட்டுவிட்டு சிச்சுவேஷனுக்கு உள்ளே போறோம்)
அதுவும் ஒரு சனிக்கிழமை மதியானம்.
மதியம் லஞ்சுக்கு சாம்பார்ல சாதத்தை போட்டு பிசைஞ்சு (சாதத்துல சாம்பார் போட்டு சாப்பிடறதெல்லாம் அவுட்டேட்டட் மாடல்) கூடவே வாழக்காய் வறுவலையும் மிக்ஸ் பண்ணி அப்புறம் கொஞ்சம் வத்தலையும் சேர்த்துக்கிட்டு ஒரு கட்டு கட்டினேன். கட்டி முடிச்சிட்டு சாம்பார்
சாதத்துக்கு ஒத்தாசையா இருக்கட்டுமேன்னு கூடவே கொஞ்சம் ரசம் சாதத்தை உள்ளே தள்ளினேன். அடடா, இவிங்க இரண்டு பேருக்கும் பிரச்சினை வந்துடக்கூடாதென்னு மூணாவதா தயிர்சாதத்தையும் அனுப்பிவிட்டு ஒரு வழியா லஞ்ச்சை முடித்தேன்.
முடித்துவிட்டு ஹாயாக ஹாலில் இருக்கும் சோஃபாவில் சாய்ந்தபடியே டீவியைப் போட்டேன். இளையராஜாவின் இனியகீதங்கள் ஓடியது. ‘ஆஹா, என்ன அருமைன்னு கண்ணசந்து உட்கார்ந்த இடத்திலேயே தூங்கப்போனேன்’.
‘என்னங்க’ - என் மனைவி.
‘என்னம்மா’ - நான்..பாதிதூக்கத்தில்.
’ஏங்க. இந்த கிஃப்ட் நல்லாயிருக்கா?’
ஒரு சின்ன கிரிக்கெட் பேட்டும், பந்தும் அவள் கையில் இருந்தது.
‘நல்லா இருக்கு. யாருக்கு?’
‘என்னங்க. அதுக்குள்ள மறந்துட்டீங்களா? இன்னைக்கு சாயந்திரம் நம்ப அபார்ட்மெண்ட் அஸ்ஸோஸியேஷன் செகெரெட்டரி வீட்டுல பர்த்டே பார்ட்டியிருக்கு. அவரோட பையனுக்கு பர்த்டே. ஞாபகமிருக்கில்லே?’
‘ஓ..ஓ..அந்த பையனுக்குத்தான் இந்த கிஃப்டா?’
‘ஆமாங்க. இதை அழகா இந்த கிஃப்ட் பேப்பர்ல சுத்தி அது மேல ஹாப்பி பர்த்டேன்னு எழுதி நம்ப பேரை போட்டுடுங்க’ என்று சொல்லியவாறு, ஒரு பெரிய கிஃப்ட் ரேப்பரையும் கூடவே ஒரு சிகப்பு ஸ்கெட்ச் பேனாவையும் கொடுத்துவிட்டு போனாள்.
’சரி. செய்திடறேன்’ என்று அவற்றை வாங்கி என் அருகில் வைத்தேன், மீண்டும் இளையராஜாவின் இன்னிசையில் மூழ்க ஆரம்பித்தேன்.
‘ஏங்க?’
‘என்னம்மா?’
‘நான் காரெடுத்துக்கிட்டு, நம்ப பிள்ளைகளை கிரிக்கெட் கோச்சிங் கிளாஸுக்கு கூட்டிட்டு போயி சாயந்திரம் வந்திடறேன்’
‘சரீ’
‘நான் சாயந்திரம் வர்றதுகுள்ளே இந்த கிஃப்டையெல்லாம் பேக் பண்ணி முடிச்சிடறீங்களா?’
‘சரீமா. கண்டிப்பா பண்ணிவைக்கிறேன்’
என் மனைவியும் பிள்ளைகளும் கிளம்பி சென்றுவிட்டனர் நானும் இளையராஜாவின் இன்னிசையில் நனைந்துக்கொண்டே அந்த கிஃப்டு பொருட்களை கையில் எடுத்தேன். அடுத்தப்பாடல்..!
‘காதலின் தீபமொன்று
ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் தந்த இன்பம்
மயக்கமென்ன... காதல் வாழ்க’
ஆஹா. இளையராஜாவின் இசையிலும், எஸ்பிபியின் குரலிலும், நம்ப சூப்பர் ஸ்டார் இரண்டு பாக்கெட்டிலும் கையை விட்டுக்கொண்டு ஸ்டைலாக நடந்த நடையிலும் மதி மயங்கித்தான் போனேன்.
அடுத்து..!
‘பச்சைமலை பூவு
நீ உச்சிமலைத் தேனு
குத்தங்குறை ஏது
நீ நந்தவனத் தேரு’
இந்த தடவை கண்ணும் மயங்கத்தொடங்கியது.
அரைத்தூக்கத்தில் அடுத்து..!
‘ஆராரோ ஆராரோ
ஆரீரோ ஆரீரோ
தாயாய் மாறி நான் பாட
சேய் போல் நீயும்..’
தூங்கிவிட்டேனுங்க.
அப்போதான் அந்த கனவு வந்துச்சிங்க. வாங்க. அந்த கனவுக்காட்சிக்குள்ளே போவோம்.
அந்த கனவில் ஒரு பதினெட்டு பத்தொம்போது வருஷம் பின்னோக்கி என்னுடைய கல்லூரி நாட்களுக்கு போய் சேர்ந்தேன்.
எஞ்சினியரிங் இரண்டாம் வருடம். என் மனைவியை முதன்முதலாக பார்த்த வருடமது.
என் நண்பர்களோடு நான் கேண்டீனில் அமர்ந்துக்கொண்டிருந்தேன். அப்போது தான் முதல் வருட மாணவ மாணவிகளை பாதுகாப்பாக உள்ளே அழைத்து வந்தார்கள். கூடவே சில ஆசிரியர்கள். ரேக்கிங் பயமாம். அப்போதுதான் அவளைப் பார்த்தேன்.
அவள் அப்போது முதலாம் ஆண்டு மாணவி. என் வருங்கால மனைவியாகப் போகிறாள். அவளுக்கு அது இன்னும் தெரியாது. ஆனால் அது எனக்கு தெரியும். ஏன்னா, இது என் கனவாச்சே. அவளை பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு காதல் ராகம் தோன்றியது. இளையராஜாவிடம் இருந்து அப்போதைக்கு அவசரமா கடன் வாங்கிய காதல் ராகம்.
‘ஒரு காதல் என்பது
என் நெஞ்சில் உள்ளது
என் நெஞ்சில் உள்ளது
கண்ணில் வந்ததடி’
என்று உளறி முணுமுணுத்தேன்.
‘என்னடா’ என்றார்கள் என் நண்பர்கள்.
திடீரென்று ஒரு வேகம் வந்தது. எங்கிருந்தோ ஒரு கித்தாரை உருவினேன் (கனவுல இதெல்லாம் சகஜமுங்க).
‘ஜிங்..ச்சிங் ஜிங்’. கித்தாரை வாசித்துக்கொண்டே பாட ஆரம்பித்தேன்.
‘இளைய நிலா
பொழிகிறதே
இதயம் வரை
நனைகிறதே
உலாப்போகும் மே..க்கும்..க்கும்..
ஹைபிட்ச் என்பதால் தொண்டை ரிவர்ஸ் கியர் போட்டது
‘உலாப்போகும் மே...ஊஹூம்...க்கும்..ஹூக்க்கும்..ச்சே’
வெறுத்துப்போனது. அப்போதுதான் திடீர்னு இளையராஜாவும், எஸ்.பி.பாலசுப்ரமண்யமும், கே.ஜே.யேசுதாஸும், கவுண்டமணியும் தோன்றினாங்க.
‘ஆ..! நீங்க எப்படி இங்கே..திடீர்னு?’
‘இந்த தோன்றது, திடீர்னு வர்றது, வந்துட்டு பிராண்டிட்டு போறது. கனவுல இதெல்லாம் சகஜமப்பா’ என்று தன் பாணியில் பதில் சொன்னார் கவுண்டமணி.
‘அது சரீங்க. மத்த மூணு பேரும் இசை சார்ந்தவங்க. அவங்க கூட நீங்க எப்படி?’
‘ஹே. நானும் வந்ததிலிருந்து பாக்குறேன். ஒரே கேள்வியா கேட்டினுக்கிறே. யார்ரா நீ?
‘நான் தாங்க இந்த கனவோட ஓனர்’
‘ஓ. இது ஓங் கனவா. நான் அந்த கோமுட்டித் தலையன் கனவுன்னு நினைச்சி வந்திட்டேன். நான் போறேம்ப்பா. யார்ரா இந்த டிஸ்டர்பன்ஸ்ன்னு தப்பா நினைச்சிக்காதே. ஹூம். பொது வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா’ ன்னு கவுண்டமணி கனவிலிருந்து எஸ்கேப் ஆனார்.
சரீன்னு சொல்லிட்டு மத்த மூணு பேருக்கும் மனசுக்குள்ளயிருந்து மானசீகமான வணக்கங்களை தெரிவித்துக்கொண்டேன்.
அவர்கள் மூவரும் என்னைப்பார்த்து, ‘தம்பி சந்தானம். ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய். நீ வெறும் ரசிகனா மட்டும் இருந்திடக்கூடாது. எய்ட்டீஸ்லேயும், இந்த ஏர்லி நைண்டீஸ்லேயும் நாங்க வெளியிடற பாடல்களையெல்லாம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கிற ரசிகனாவும் இருக்கனும். அதனால நீ பாடணும். சத்தம் போட்டு பாடணும்’ என்று சொல்லி என்னை ஆசீர்வதித்தார்கள்.
‘கண்டிப்பா செய்யறேனுங்க. உங்க வார்த்தைகளை இந்த ரசிகன் என்றைக்கும் தட்டவேமாட்டானுங்க. ஆனா...!!?’ என்று நான் தலையை சொறிந்தேன்.
‘என்ன ஆனா?’
‘இல்லீங்க. உங்க பாடல்களையெல்லாம் நான் பாடித்தான் அடுத்த தலைமுறைக்குப் போய்ச் சேரணும்னு அவசியம் இல்லீங்களே. அவங்க பாட்டுக்கும் ரேடியாவிலேயும் டீவியிலேயும் கேட்டுக்கலாமே?’
மெல்ல சிரித்துக்கொண்டே இளையராஜா என்கிட்ட வந்தார்.
‘சந்தானம். உன் கனவுலே நீயே லாஜிக்கெல்லாம் பார்க்கலாமா?’
’சரீங்க. ஆனா...’
‘என்ன மறுபடியும் ஆனா..?’
’இல்லீங்க. இது வேற ஆனா..ங்க’
‘வேற ஆனா...வா?’
‘ஆமாம்ங்க. ஆனா எனக்கு இந்த ஹைபிட்சுல பாட வரமாட்டேங்குதுங்க’
‘பரவாயில்லை. தினம் பாடிப் பழகு’
‘நீங்க சொன்னா சரீங்க. இன்னையிலேர்ந்து தினமும் பாடிப் பழகுகிறேன்’
திடீரென்று எஸ்பீபி உள்ளே புகுந்தார்.
‘இதனால உன் வீட்டுல என்ன பிரச்சினை வந்தாலும் கவலைப் படாதே’
‘அப்படி என்னாங்க பிரச்சினை வந்திடப்போகுது. இருந்தாலும் நீங்க சொன்னா சரீங்க’
‘சரி. அந்த இளைய நிலா பாட்டை இன்னும் நிறைய தடவை பாடிப்பழகு’
‘சரீங்க’
இப்போது கே.ஜே.யேசுதாஸ் உள்ளே புகுந்தார்.
‘கித்தார் பாட்டு பாடறியா. பரவாயில்லை. இளையநிலா பாடி முடிச்சதற்கப்புறம் நான் பாடிய ‘என் இனிய பொன் நிலாவே’ பாட்டையும் பாடிப்பழகு. அதுவும் கித்தார் ஸாங்தான்’
‘ஆகட்டும்ங்க அய்யா’
இப்படி இவிங்க எனக்கு ஊக்குவிக்க, எனக்கு வேகம் வந்து அந்த கித்தாரை கண்டமேனிக்கு வாசித்தபடி பாட ஆரம்பித்தேன்.
என் பாடலை கேட்டபடி அந்த முதலாம் ஆண்டு மாணவி, என் வருங்கால மனைவி, என்னருகில் வந்தாள்.
என் மனது சிறகடித்தது.
ஆஹா, அவள் என்னைப் பார்த்து, தன்னுடைய நிலாமுகத்தில் இன்முறுவலோடு, சிறிது நாணம் கலந்த தயக்கத்தோடு, என்னைப்பற்றி புகழ்ந்து, இரண்டொரு வார்த்தைகள் சொல்லப்போகிறாள். ஆஹா..! அப்படியே எனக்கு இன்னும் கொஞ்சம் அதிர்ஷ்டமிருந்தால், என்னுடைய கையை குலுக்கி வாழ்த்து தெரிவித்தாலும் தெரிவிப்பாள். டேய் சந்தானம். தயவு செய்து வழவழ கொழகொழ வென்று அவளிடம் வழியாமல் பேசடா..என்று நான் எனக்குள்ளே நினைத்துக்கொண்டேன்.
வருகிறாள்...
வந்துவிட்டாள்...
கைகளை நீட்டினாள்..
நானும் கையை நீட்டினேன். ‘ஹலோ. அவ் டு யூ டூ. வெரி நைஸ் டு மீட் யூ’ என்றபடி எனது வலது கையை விறைப்பாக நீட்டினேன்.
பதிலுக்கு அவள் என் கையை குலுக்குவாள் என்று எதிர்ப்பார்த்தேன்.
ஆனால் அதற்கு மாறாக அவள் என் தோள்களை பிடித்து குலுக்கினாள்.
‘என்னங்க. என்னங்க’ - இது அவள்.
‘அட. என் தோளை விடுங்க..! இன்னாங்க இது? பார்க்கிறவங்க யாராவது தப்பாக நினைச்சிடப் போறாங்க’ - இது நான்.
‘தப்பா நினைச்சா பரவாயில்லைங்க. நீங்க எழுந்திருங்க முதல்ல’
‘நான் ஏங்க எழுந்திரிக்கனும். நான் தான் பாட்டு பாடிக்கிட்டு இருக்கேனில்லே’
‘கிழிச்சீங்க. உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் படற அவஸ்தை இருக்கு பாருங்க’ - சலித்துக்கொண்டாள்.
‘நமக்கு கல்யாணமாயிடுச்சா என்னங்க சொல்றீங்க’
‘அடப்பாவி மனுஷா. கல்யாணாமாகி இரண்டு பசங்க இருக்காங்க. நியாபகம் இருக்கா?’
‘என்னது’ என்றவாறு சோபாவிலிருந்து துள்ளியெழுந்தேன்.
மணி சாயந்திரம் ஐந்தரை காட்டியது. எதிரே என் மனைவி நின்று கொண்டிருந்தாள்.
‘என்னங்க. எத்தனை தடவைதான் உங்களை உலுக்கி எழுப்புறது?’
‘ஓ. நல்லா தூங்கிட்டேன் போல’
‘அது தெரியுது. அது என்ன, தூக்கத்துலே பாட்டு, உளறல்?’
‘ஹி..ஹி..’ வழிஞ்சேன்.
‘அது சரி. சொந்த பொண்டாட்டிகிட்டேயே, ”ஹலோ. அவ் டு யூ டூ. வெரி நைஸ் டு மீட் யூ, நமக்கு கல்யாணமாயிடுச்சா”ன்னு கேட்ட முதல் ஆளு நீங்க தாங்க’
‘ஹி..ஹி..’
’சரி சரி. ரொம்ப வழியாதீங்க.’ என்று சொன்னவள் திடீரென்று பதற்றமானாள்.
‘அய்யய்யோ. என்னா காரியம் பண்ணிவைச்சிருக்கீங்க பாருங்க. கிஃப்டா கொடுக்கவேண்டிய கிரிக்கெட் பேட்டுல இப்படி கிறுக்கி வைச்சிருக்கீங்களே’
அப்போதுதான் பக்கத்திலிருந்த பேட்டை பார்த்தேன். பூளோக படத்தில் இடமிருந்து வலப்பக்கமா கோடுகள் போகுமே, அந்த மாதிரி நிறைய கோடுகள் இருந்தது.
‘ஓ, இதுதான் கனவுல வந்த கித்தாரா?’. பக்கத்தில் ஸ்கெட்ச் பென் திறந்து இருந்தது. ‘ஓ...இந்த பேனாவை வைச்சுத்தான் கித்தார் வாசிக்கிறேன்னு நினைச்சிக்கிட்டு இந்த பேட் மேலே கிறுக்கி தள்ளியிருக்கேன்போல..’..எனக்குள்ளே எண்ணிக்கொண்டேன்.
‘என்னங்க, பெக்கெ பெக்கென்னு முழிக்கிறீங்க. பேரு தான் பெத்த பேரு. இந்த கோயமுத்தூர்ல ஸாஃப்ட்வேர் கம்பெனி ஓனர்னு பேரு. ஆனா வீட்டுலதானே உங்க வண்டவாளம் தெரியுது. அது எப்படீங்க உங்களை நம்பி உங்க கம்பெனில நூத்தியிருபது பேர் வேலை செய்யுறாங்களோ. சொல்லுங்க. ஏன் பேட்டில் கிறுக்கினீங்க?’
பிறகென்ன பண்ணுவது? கனவைப் பற்றி முழுசாக சொன்னேன். அந்த பாடல்களெல்லம் அவளுக்காக பாடியதுடதான் என்றும் சொன்னேன்.
சிரித்துக்கொண்டாள். பிறகு சொன்னாள்.
‘கேட்கிறதுக்கு நல்லாத்தான் இருக்கு. ஆனாலும், அடுத்த ஒரு வாரத்துக்கு உங்களுக்கு பிரேக்ஃபாஸ்ட் வெறும் ஓட்ஸ் கஞ்சிதான். அதான் தண்டனை’ - என்று சொல்லியவாறு சொன்றுவிட்டாள்.
’உன் வீட்டுல என்ன பிரச்சினை வந்தாலும் கவலைப் படாதே. பாடுன்னு எஸ்.பீ.பி இதைத்தான் சொன்னாரோ?’ - எண்ணிக்கொண்டேன்.
இதுதாங்க அந்த கனவு மற்றும் கனவு வந்த சிச்சுவேஷன்.
(இப்போ அந்த சிச்சுவேஷன் எண்டிங் மியூசிக் போட்டுவிட்டு சிச்சுவேஷனுக்கு வெளியே, அதாவது நிகழ்காலத்துக்கு வந்திடறோம்)
பாத்ரூமிலிருந்து பாடியபடி வெளியே வந்தேன். என் மனைவி கிச்சனில் இருந்தாள்.
‘என்னங்க?’
‘என்ன?’
‘மேட்டுப்பாளையத்தில இருந்து உங்கம்மாவும் அப்பாவும் ஃபோன் பண்ணியிருந்தாங்க. இந்த தடவை பொங்கலுக்கு நம்பளை பத்து நாள் வந்து இருந்திட்டு போக சொன்னாங்க. போன தடவை மாதிரி நீங்க பாட்டுக்கும் ஏதாவது கிளையண்ட் மீட்டிங்ன்னு வெளிநாட்டுக்கு போயிடாதீங்கன்னு உங்க அம்மா உங்களுக்கு அட்வான்ஸ் நோட்டீஸ் கொடுக்கச் சொன்னாங்க’
’சரீ. பொங்கலுக்கு இன்னும் இரண்டு மாசம் இருக்கில்லே. பரவாயில்லை’
இரண்டு மாசமும் போனது. பொங்கலும் வந்தது.
மேட்டுப்பாளையம்.
நான் பிறந்து வளர்ந்த ஊரு மட்டும் இல்லீங்க, எங்க அப்பாவும் அம்மாவும் பொறந்து வளர்ந்த ஊரும் கூட இது. ஆஹா..ஊரே ஜில்லுன்னு இருக்கும். தோட்டம் தொறவுன்னு எங்க வீடு கொஞ்சம் பெரிய வீடுதான். இங்க தான் என் அப்பாவும் அம்மாவும் இருக்காங்க. அட இங்க தான் இனிமேலும் இருப்பாங்களாம். ஒரே பையன் நான். என்கூட கோயம்புத்தூர் வந்துடுங்கன்னு சொன்னா, பொறந்த இடத்தை விட்டு வெளிய வரமாட்டேன்னு செண்டிமெண்ட் சீன் விடுவாங்க. அதுவும் இங்கே பொறந்து வளந்து கோயம்புத்தூர் போய் செட்டிலான என்னைப்பார்த்து.
மறுநாள் காலை.
என் மனைவி எழுந்து குளிப்பதற்காக பாத்ரூமுக்கு சென்றாள். பாத்ரூம் என்றால் அபார்ட்மெண்ட்டில் உள்ளது போல பெட்ரூமில் அட்டாச்சிடு இல்லை. வீட்டின் பின் பக்கம், ஆனால் வீட்டை ஒட்டியே, தோட்டம் துவங்கும் இடத்தில் இருக்கிறது.
போனவள் சிறிது நேரத்திலேயே அலறி அடித்துக்கொண்டு வந்தாள்.
‘என்னங்க, என்னங்க. பாத்ரூமிலே..க..கர..’ மூச்சு வாங்கினாள்
அதற்குள் என் அப்பாவும் அம்மாவும் வந்து விட்டனர்.
‘அத்தை..மாமா..பாத்ரூமிலே..கர..கர’ என்று திண்றினாள்.
‘என்னம்மா. கரப்பான் பூச்சியா’ -என் அப்பா.
‘அ..ஆமாம் மாமா’
‘ஈஸ்வரி. பாத்ரூமிலே கரப்பான் பூச்சிங்க வர்றதை பத்தி மருமக கிட்ட சொல்லச் சொன்னேனே, சொல்லலியா’ என் அம்மாவைப் பார்த்துக் கேட்டார்.
‘ஆமாங்க. மறந்த்திட்டேங்க. பேரப்பசங்களை பார்த்ததும் இதைச் சொல்ல மறந்திட்டேன்’ - என் அம்மா.
இப்போது நான் குறுக்கிட்டேன். ‘என்னம்மா, பாத்ரூமில் கரப்பான் பூச்சிகளா? நல்லாத்தானேமா இருந்துச்சி அந்த பாத்ரூமுங்க எல்லாம்’
‘அதாண்டா. இரண்டு பக்கத்து வீட்டுக்காரங்களும் அவங்க தோட்டங்களையெல்லாம் அழிச்சிட்டு, நிறைய போர்ஷன் வைச்ச பெரிய வீடா கட்டி, வாடகைக்கு விட்டுகிட்டிருக்காங்க. அதனால, அந்த தோட்டத்திலிருந்த பூச்சிங்கயெல்லாம் இங்க வந்துடுச்சீங்க. அதுவும் இந்த கரப்பான் பூச்சிங்க இருக்கு பாரு...எவ்வளவு மருந்து அடிச்சாலும் சரி. பத்தே நிமிஷத்துல அந்த மருந்தையெல்லாம் டானிக் மாதிரி குடிச்சிட்டு திரும்பி வந்திடுதுங்க. சமயத்துல எனக்கே பாத்ரூம் போறதுக்கு பயமா இருக்கு. உங்கப்பாவை கூட்டி மருந்தை அடிக்க சொல்லிட்டு உடனேயெ குளிச்சிட்டு வந்திடுவேன். நீங்களும் அந்த மாதிரியே பண்ணுங்க’ என் அம்மா.
நான் என் மனைவியைப் பார்த்தேன். ’அம்மா சொன்ன மாதிரியே செய். குறிப்பா குழந்தைங்க பயந்திடப்போறாங்க பார்த்துக்கோ’ என்றேன். பிறகு எனது அம்மாவைப் பார்த்து, ‘அம்மா. பசிக்குது. சீக்கிறம் தோசை ஊத்துங்க. சாப்பிட்டு கிளம்பனும்’
‘கிளம்பனுமா. எங்கே?’
‘கோயம்புத்தூருக்குத்தான். நேத்து ராத்திரி திடீர்ன்னு அமெரிக்கவிலிருந்து ஃபோன். ஒரு சாஃப்டுவேர் பிராஜெக்டுல பிரச்சினை. ஆபிஸுக்குப்போய் இரண்டு நாள் டெவெலெப்பருங்க கூட இருந்தேன்னா முடிஞ்சிடும்.’
‘என்னடா. வர்றதே பத்து நாளைக்கு. அதுல ரெண்டு நாள் திரும்பிப் போறேன்னா எப்படிடா?’
‘பரவாயில்லேமா. நான் மட்டும் தானே போறேன். தோ ரெண்டு நாள்ல வந்திடறேன்’
‘சரி. போய் குளிச்சிட்டு வா’
‘ம்ஹூம். அதுக்கெல்லாம் நேரமில்லே. நான் வாசல்ல வாஷ்பேசின்ல பல்லை விளக்கிட்டேன். குளிக்கிறதெல்லாம் கோயம்புத்தூர் போனதற்கப்புறம் தான்’.
நான் கோயம்புத்தூர் வந்துவிட்டேன். என் மனைவியிடம் ஃபோனில் பேசினேன். பாத்ரூமுக்கு மருந்தடித்துவிட்டு, கிடைக்கிற பத்து நிமிஷ கேப்பில் அவசர அவசரமா குளித்துவிட்டு ஓடி வந்து விடுகிறாளாம். முன்னே மாதிரி நிம்மதியாக குளிக்க முடிவதில்லை என்று சொன்னாள்.
அதற்கு ஏதாவது வழி பண்ண வேண்டுமென்று நினைத்துக்கொண்டேன். பிறகு வேலை பலுவில் மறந்து போனேன்.
இரண்டு நாள் கழித்து மேட்டுப்பாளையம் சென்றேன். மதியான நேரம்.
அப்பா மட்டும் வீட்டில் இருந்தார். மத்தவங்க எல்லாம் காலையிலே ஷாப்பிங் சென்றுவிட்டதாக சொன்னார்.
‘சரீப்பா. நான் குளிச்சிட்டு வந்திடறேன்’
குளிக்க பாத்ரூம் போனேன். பழைய, ஆனால் பெரிய பாத்ரூம் அது. மேலெ சுவரில் பாதுகாப்பாக, ஆனால் ஜில்லென்று காற்று வரக்கூடிய அளவிற்கு வெண்டிலேட்டர்கள் இருந்தன. பிரெஷாக காற்று வந்து கொண்டிருந்தது. ஆஹா என்ன சுகம் என்று நினைத்துக்கொண்டே ஷவரை திறந்தேன். தண்ணீர் கொட்டியது. கூடவே எனது இசைஞானமும் சேர்ந்துக்கொண்டது.
‘மடை திறந்து பாயும் நதியலை நான்’லிருந்து தொடங்கி, ‘பழமுதிர்ச்சோலை எனக்காதத்தானு’க்கு சென்று, ’புதுச்சேரி கச்சேரி எக்கச்செக்க பார்ட்டி ஒண்ணு பிடிச்சேன்’க்கு வந்து, ‘கண்மணியே காதல் என்பது கற்பனையோ’ன்னு கேள்வி கேட்டுவிட்டு, ‘அள்ளித்தந்த பூமி அன்னையல்லவோ சொல்லித்தந்த வானம்’ன்னு தத்துவம் பேசிவிட்டு, ‘ராஜா கையை வச்சா அது ராங்கா போனதில்லை’ன்னு பெருமையா பாடத்தொடங்கி ‘ஓரிடத்தில் உருவாகி வேறிடத்தில் விலை போகும்..கார்களைப் போல் பெண்ணினமும் கொண்டவனைப்போய் சேரும்’ங்கிற இடத்தில் ஹைபிட்ச்சில் திக்குமுக்காடி, பத்து பதினைந்து தடவை ரிவர்ஸ் கியர் போட்டு அந்த லைனை திருப்பித்திருப்பி பாடி, கரகரவென தொண்டையை புண்ணாக்கி கொண்டு, அதே சமயத்தில் குளித்து முடித்துக்கொண்டு திரும்பினேன்.
வந்து ஹாலில் அமர்ந்தேன். அப்பா எதிரே ஈஸிசேரில் அமர்ந்துக்கொண்டு ஹாயாக பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். காலையில் படித்த அதே பேப்பரை மதியான நேரத்திலும் ’ரிவைஸ்’ பண்ணுவது வழக்கம்.
அப்போது வாசல் முற்றத்தில் சத்தம் கேட்டது.
வாசல் கேட்டை திறந்துக்கொண்டு எங்கள் கார் உள்ளே வந்தது. நின்றது. இறங்கினார்கள் என் மனைவியும், குழந்தைகளும், என் அம்மாவும்.
‘வாங்க. இப்பத்தான் வந்தீங்களா?’ - என் மனைவி
‘வாடா. இப்பத்தான் வந்தியா? - என் அம்மா
‘ஆமாம்’ - ரெண்டுபேருக்கும் பொதுவாக சொன்னேன்
‘தோ இருங்க. நான் போய் அவசரமா குளிச்சிட்டு வந்திடறேன். ஷாப்பிங் போயிட்டு அப்படியே பெரிய மாமா விட்டுக்கு போயிருந்தோம். அவரோட குட்டிப்பேரன், தூக்கிக்கொஞ்சிகிட்டு இருக்கும்போதே என் மேல உச்சா போயிட்டான். புடவையெல்லாம் ஆயிடுத்து. ஆமா, நீங்க குளிச்சிட்டீங்களா?’ என்றாள் என் மனைவி.
‘ஹலோ. என்ன கிண்டலா. நல்லா ஒரு மணி நேரம் பாட்டு பாடிகிட்டே சூப்பரா குளிச்சி முடிச்சிட்டு இப்பத்தான் வந்து உட்கார்ந்துகிட்டுருக்கேன்’
‘சரீ. நானும் குளிச்சிட்டு வந்திடறேன். அதுக்குள்ளே சாப்பிட உட்காந்திடாதீங்க. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. நானும் வந்திடறேன்’
‘சரி’ என்றேன்.
குளித்துவிட்டு பொறுமையாக வந்தாள்.
வந்தவள் கிச்சனில் இருந்த என் அம்மாவிடம் போய் எதோ சொன்னாள்.
‘என்னா கிசு கிசு’ என்றேன்.
‘டேய் போடா. பொம்பிளைங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும். அதெல்லாம் உனக்கு சொல்ல வேண்டியதில்லை’ - என் அம்மா.
‘நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். ஆனா முதல்ல சாப்பாடு போடுங்க’- நான்.
மறுநாள்.
பொறுமையாக எழுந்தேன். பொங்கலுக்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கு. ஹாலுக்கு வந்தேன். குழந்தைகள் தாத்தாவோடு விளையாடிக் கொண்டிருந்தனர். கிச்சனைப் பார்த்தேன். உள்ளே அம்மாவும் மனைவியும்.
‘அம்மா, காபி’ என்றேன்.
‘இருடா. குளிக்கலையா?’
‘அப்புறம் குளிக்கிறேன்மா.’
அப்போது தான் பார்த்தேன், அவர்கள் இரண்டு பேரும் இன்னும் குளிக்கவில்லை.
’அதுசரீ. நீங்க ரெண்டு பேரும் குளிக்கிலையா?’
‘இல்லைங்க. ரொம்ப பிஸி’ என்றாள் என் மனைவி. ‘நீங்க குளிக்கிலையா?’
‘தோ போறேன்’
‘போய் நல்லா பாடிட்டு வாங்க’
‘என்னது’
‘ஒண்ணுமில்லை. கோயமுத்தூர் அபார்ட்மெண்ட் பாத்ரூமில்தான் உங்களால ஃபிரீயா சத்தமா பாடமுடியறதில்லை. இங்கியாவது நீங்க ஃபிரீயா பாடலாமில்லியா. அதைச் சொன்னேன்’ என்றாள்.
’ஆஹா. டேய் சந்தானம். உன் முயற்சியில் நீ வெற்றியடைகின்ற தருனம் நெருங்கிடுச்சிடா. முன்னேயெல்லாம் நீ பாட ஆரம்பித்தால் காதில் பஞ்சு எடுத்து சொருகிக்குவாள் உன் மனைவி. இன்று அவளை உன்னை பாடச்சொல்லுகிறாளென்றால்’ என்று என் மனிசிலே சொல்லிக்கொண்டு பாடச்....அ..குளிக்கச்சென்றேன்.
ஒரு மணி நேரம் கழித்து ஃபிரெஷ்ஷாக வந்தேன். சுடச்சுட இட்டிலி இருந்தது. அவற்றை எடுத்து என் தட்டில் வைத்தாள் என் மனைவி.
பிறகு என் அம்மாவைப் பார்த்து, ‘அத்தை அவர் குளிச்சிட்டு வந்திட்டாரு. நீங்க போய் குளிச்சிட்டு வந்திடுங்க. அடுத்து நான் போகனும்’ என்றாள்.
கிச்செனில் இருந்து என் அம்மா வந்தார். ‘டேய் உன் பாட்டையெல்லாம் கேட்டுகிட்டுதான் இருந்தேன். பிரமாதம்’ என்று சொல்லிக்கொண்டே குளிக்க சென்று விட்டார்.
அடுத்த நாள் காலை...
நான் பொறுமையாக ஹாலுக்கு சென்றேன்.
கிச்செனில் இருவரும் பிஸியாக இருந்தார்கள். இன்னும் குளிக்கவில்லை.
‘என்ன, ரெண்டு பேரும் இன்னும் குளிக்கிலையா?’- கேட்டது என் அப்பா.
என் அம்மா பதில் சொன்னார்கள் ‘இல்லைங்க. நாங்க ரெண்டுபேரும் பிஸி. நம்ப புள்ளை முதல்ல குளிக்கட்டும். அவன் பாட்டு பாடிகிட்டே குளிச்சான்னா, அதை கிச்சனில் நாங்க கேட்டுகிட்டே சமையல் பண்ணிடுவோம்’
நான் வானத்தில் மிதந்தேன். ‘அடேய் சந்தானம். கலக்கிட்டு இருக்கேடா’ என்று எனக்கு நானே கங்கிராஜுலேஷன்ஸ் சொல்லிக்கொண்டேன்.
மேலும் பாத்ரூமுக்கு போய் ஹைபிட்சில் பிச்சி வாங்கினேன். பிறகு சாப்பிட வந்தேன்.
‘அத்தை அவர் குளிச்சிட்டு வந்திட்டாரு. இப்ப நீங்க போய் குளிச்சிட்டு வந்திடுங்க. அடுத்து நான் போகனும்’ என்றாள் என் மனைவி.
நான் அவளை பார்க்க அவள் என்னை பெருமையாக பார்த்த மாதிரி இருந்தது.
மறுநாள் காலை...
நான் பொறுமையாக ஹாலுக்கு சென்றேன்.
கிச்செனில் இருவரும் பிஸியாக இருந்தார்கள். இன்னும் குளிக்கவில்லை.
‘என்ன, ரெண்டு பேரும் இன்னும் குளிக்கிலையா? நாளைக்கு வேற போகிப்பண்டிகை. நீங்க பாட்டுக்கும் இவ்வளவு நேரம் குளிக்காம இருந்தா என்ன அர்த்தம். ஈஸ்வரி நீயாவது குளிச்சிருக்க கூடாதா? நீ நம்ப மருமகளுக்கு எடுத்துக்காட்டா இருக்க வேணாமா?’- கேட்டது என் அப்பா.
‘கொஞ்சம் பிஸி. இருங்க, நம்ப புள்ளை குளிச்சிட்டு வந்திடட்டும்’, என் அம்மா.
‘அது என்ன. இப்போல்லாம் சந்தானம் குளிச்ச பிறகு தான் குளிக்க போவேன்னு சொல்றீங்க. அவன் குளிக்கிறதுக்கே ஒரு மணி நேரம் ஆயிடுது. அதுக்கப்புறம், நீங்க லேட்டா குளிச்சு...அடடா, வீட்டுல இருக்கிற பெண்கள் இவ்வளவு நேரமா குளிக்காம இருக்கிறது நல்லாவா இருக்கு?’
இப்போ நான் உள்ளே புகுந்தேன். அவர்கள் சார்பாக பேச ஆரம்பித்தேன்
‘பரவாயில்லை விடுங்கப்பா. நான் பாத்ரூமில் இருந்து பாடறதை கேட்டுகிட்டே அவங்க என்ஜாய் பண்ணி சமையல் பண்றாங்க. இதை ஏம்ப்பா தடுக்குறீங்க?’
’ஆமாம். நீ பாத்ரூமில் பாடறது ரொம்ப கிளியரா கிச்சனில், அதுவும் அந்த குக்கர் சத்தத்தில், ஹால்லேயிருந்து குழந்தைங்க போடற சத்தத்தையெல்லாம் மீறி கேட்டுட போறதாக்கும். இந்தாங்க. நீங்க ரெண்டு பேரும் இப்போ உண்மையைச் சொல்லனும். என்ன நடக்குது இங்கே’ ,
என் அப்பா கொஞ்சம் கண்டிப்பு காட்டினார்.
‘அது..அது..அது,’ இரண்டு பேரும் தடுமாறினார்கள்.
‘இரு. நான் என் மருமகளை பர்த்து கேட்கிறேன். நீ என்கிட்ட உண்மையை மட்டும் தான் சொல்லுவேன்னு தெரியும். நீ சொல்லும்மா’
என் மனைவி என்னைப் பார்த்தாள். தயங்கிவிட்டு பிறகு..
‘அது வந்து மாமா. உங்களுக்கே தெரியும் நம்ப பாத்ரூமில் கரப்பான் பூச்சி தொல்லை இருக்கு. ஆனா, அன்னைக்கு இவர் வந்து ஒரு மணி நேரம் பாடி குளிச்சப்புறம் நான் பாத்ரூம் போனேனில்லைங்களா? அப்போ தான் பார்த்தேன், பாத்ரூம்ல ஒரு கரப்பான் பூச்சியையும் காணோம். அன்னையிலிருந்து தெரிஞ்சிக்கிட்டேன், இவரு எப்ப பாட்டு பாடி குளிச்சிட்டு வந்தாலும் அடுத்த ஐந்தாறு மணி நேரத்துக்கு அதுங்க பாத்ரூம் பக்கமே வர்றதேயில்லைன்னு. அதனால் முதல்ல அவரை குளிக்க விட்டுட்டு நாம்ப குளிக்கலாம்னு இந்த ஐடியாவை நான் தான் அத்தைக்கு சொன்னேன்’
’ஆ’ - இது நொந்துபோன நான்
‘ஹெ....ஹெ..ஹெ..குடும்ப வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா’, கண் முன் தோன்றி கவுண்டமணி சொல்லிவிட்டு போனார்.
By
Sampath
03-Feb-2012
Comments
Post a Comment