சிறுகதை: என் மாணவன்


ஃபிலடெல்பியா, யு.எஸ்.ஏ.

சனிக்கிழமை காலை.

அமைதியாக ரிக்லைனர் சோஃபாவில் காலை நீட்டி அமர்ந்துக்கொண்டு ’சேனல்லைவ் டாட் டீவி’ மூலமாக தொலைக்காட்சியில் சன் டீவி பார்த்துக் கொண்டிருந்தேன். எதிரே என் பேரக்குழந்தைகள் தரையில், இல்லை, கார்ப்பெட்டில் விளையாடிக்கொண்டிருந்தனர்.

கிச்சனில் என் மனைவி பிஸியாக இருந்தாள். அவள் அருகில் எங்கள் மகள் கையில் இருந்த காஃபியை மெல்ல ரசித்து குடித்துக்கொண்டே என் மனைவிக்கு, அதாவது தன் அம்மாவுக்கு, கிச்சனில் எதெது எங்கிருக்கு என்று சோம்பலாக சொல்லிக்கொண்டிருந்தாள். அவள் இன்னும் குளிக்கவில்லை. நைட்டியில் இருந்தாள்.

‘ஏம்மா செல்வி. போய் குளிச்சிட்டு வரவேண்டியது தானே?’

‘இல்லைப்பா. நேத்துதான் நீங்க ரெண்டுபேரும் முதல் முதலா இங்க அமெரிக்காவுக்கு வந்திருக்கீங்க. வந்ததும் அம்மா சொல்லிட்டாங்க. இன்னையிலேர்ந்து சமையல் நான் தான், நீ ரிலாக்ஸா இருன்னு. அதனால எனக்கு ஒரு வேலையும் இல்லை. நான் டிபன் சாப்டுட்டு அப்புறம் பொறுமையா குளிச்சிக்கிறேன்பா’

‘இல்லைன்னா மட்டும் இவ சனிக்கிழமை அதிகாலைல எழுந்து, குளிச்சிட்டு, வாசல் தெளிச்சு கோலம் போட்டுட்டுத்தான் மறுவேலை பார்ப்பா மாமா’. இதை சொல்லிக்கொண்டே மாடிப்படியிலிருந்து இறங்கி வந்தது, என் மருமகன் சிங்காரவேலன்.
அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான வீடுகளில், மாடிப்படி என்பது வீட்டுக்குள்ளே தான் இருக்கும். ஆதலால் மேலெயிருந்து கீழே இறங்கி வரும் போதே நாங்கள் பேசுவது கேட்டிருக்கும்.’

‘ஹலோ. என்ன கிண்டலா? இப்போ சாப்பிடுவதற்கு வெண்பொங்கல் சட்னி வேணுமா இல்லை ஓட்ஸ் மீல் கஞ்சியே போதுமா?’ - இது செல்வி.

‘அம்மா தாயே. இத்தனை நாளா காலையில ஓட்ஸ் மீல் சாப்பிட்டு ஒரே போரடிச்சிருச்சி. எனக்கு இந்த வம்பே வேண்டாம். நீயாச்சு! உன்னை பெத்தவங்களாச்சு!’

சொல்லிக்கொண்டே என் அருகே வந்த சிங்காரவேலன் ‘ஆங்! மாமா ஒண்ணு சொல்ல மறந்திட்டேன். போன வாரம் இங்க ஒரு தமிழ் சங்க விழாவுக்கு போயிருந்தபோது ஒருத்தரை பார்த்தேன். அவரும் நம்ப ஊர்தான். பேசிக்கிட்டே இருக்கும் போதுதான் தெரிஞ்சது, அவர் உங்களுடைய பழைய ஸ்டூடண்ட்ன்னு’.

‘அப்படியா! பேர் என்ன மாப்பிள்ளை?’

‘கனியமுதன். ஊர்ல உங்க தெருவுல இருக்கிற வக்கீல் இனியநாதனுடைய பையன்னு சொன்னா உங்களுக்கு தெரியும்ன்னு சொன்னார்’

‘கனியமுதன். ஓ. ஞாபகம் இருக்கு. என்னுடைய ஸ்டூடண்ட் தான். இப்ப என்ன பண்றான்?’

‘ஐடி தான். கம்பெனி பேரு ஏதோ சொன்னாரு. ஞாபகமில்லை. ஆனா ஹீ ஈஸ் எ யங் ச்சாப். இன்னும் பேச்சிலர் தான். யூஸ்ஸுக்கு வந்து கொஞ்சம் வருஷம் தான் ஆகுது போல. நீங்க இந்த வாரம் இங்க வரீங்கன்னு தெரிஞ்சதும் அவருக்கு உங்களை உடனே வந்து பார்க்கனும்னு ஆசை. முடிஞ்சா இன்னைக்கு சாயந்திரமே வந்து பார்க்கலாமான்னு கேட்டாரு. என்ன மாமா, வரச் சொல்லட்டுமா?’

‘அப்படியா. ரொம்ப நல்லது. கண்டிப்பா வரச்சொல்லுப்பா’

அதற்கப்புறம் நான் நினைவலைகளில் மூழ்கிப்போனேன்.

கனியமுதன். மறக்கமுடியுமா? என்னிடம் படித்த மாணவர்களிலே வால்தனத்தில் சிறந்த மாணவன் யாரென்று கேட்டால் தயங்காமல் முதலிடத்தை அவனுக்குத் தான் பரிந்துரை செய்வேன். படிப்பும் சுமார்தான். வால்தனம்தான் நிறைய உண்டே தவிர அவன் கெட்டவன் கிடையாது.

நான் தமிழ் வாத்தியாராக இருந்து தற்போது ரிட்டையர் ஆனவன். எங்கள் ஸ்கூலில் பிளஸ் ஒன், பிளஸ் டூ வகுப்புகளுக்கு தமிழ் சொல்லிக்கொடுத்த வாத்தியார்களில் நானும் ஒருவன். சில வருடங்களுக்கு முன்பு, அவன் பிளஸ் ஒன் மாணவனாக என்னிடம் வந்து சேர்ந்தான். வந்த முதலாம் நாளே தன்னுடைய முத்திரையை பதித்தான்.

நான் எப்போதும் வருடத்தின் முதல் பீரியட்டில் பாடம் நடத்தியதில்லை. என்னைப் பற்றி அறிமுகபடுத்திவிட்டு, மாணவர்களின் அறிமுகங்களை முடித்துவிட்டு, பிறகு சிறிது திருவள்ளுவரைப் பற்றியும் திருக்குறளைப் பற்றியும் பேசுவேன். அவ்வவளவுதான். அன்றும் அவ்வாறே செய்தேன். நன்றாக ஞாபகம் இருக்கிறது.

‘மாணவர்களே! திருவள்ளுவரை பற்றி உங்களுக்கு தெரிந்த சிலவற்றை கூறுங்கள்’

பலவிதமான பதில்கள் வந்தது.

‘திருக்குறளை நமக்கு தந்தவர் சார்’- ஒரு மாணவன்

‘நன்றி. அடுத்து?’

‘அவருக்கு தெய்வப் புலவர், பொய்யாமொழிப் புலவர் என்று வேறு சில பெயர்கள் உள்ளன சார்’ - இன்னொரு மாணவன்

‘மிக்க சரி. அடுத்து?’

‘அவர் மயிலாப்பூரில் பிறந்தவர். அவர் மனைவியின் பெயர் வாசுகி’ - இது ஒரு மாணவி.

‘சரி. அடுத்து?’

‘சார். அநேகமாக அவர் உடையார் ஜாதியை சேர்ந்தவர்ன்னு நினைக்கிறேன் சார்’

ஒரு அருமையான மாலை வேளையில், நல்ல காற்றோட்டமுள்ள ஒரு சபாவில், ஒரு அருமையான கர்நாடக சங்கீத கச்சேரியை அனைவரும் மெய் மறந்து, கண்களை மூடி ரசித்துக்கொண்டிருக்கும் போது, மேடையில் மிருதங்கம் வாசிப்பவர் திடீரென்று அந்த மிருதங்கத்தை தூக்கி எறிந்துவிட்டு ’ராக் டிரம்ஸ்’ வாசித்தால், எப்படி திடுக்கென்று தூக்கி போடுமோ, அந்த மாதிரி எனக்கு மட்டுமல்ல, என் கிளாஸில் இருந்த அனைவருக்குமே ’திடுக்’ என்றது அந்த பதில்.

நான் பதில் வந்த திசையை நோக்கினேன்.

கனியமுதன் நின்றுக் கொண்டிருந்தான்.

‘தம்பீ. என்ன சொல்கிறாய்?’

‘பின்னே! அவர் தானே சார், “அன்புடையார் என்றும் உடையார்”ன்னு சொன்னார். ”அன்புடையார் என்றும் உடையார்”ன்னா “அன்புள்ளவங்க எல்லாம் உடையார்ன்னு” அர்த்தம். அப்படீன்னா அவர் அந்த சாதியை சேர்ந்தவராத்தான் இருக்கனும்?”

இந்த தடவை முழு கிளாஸூமே சேர்ந்து சிரித்தது.

ஆனால் எனக்கு கோபம்தான் வந்தது. வந்த கோபத்தில் அவனை ஓங்கி ஒரு அறை விடலாமா என்று தோன்றியது. ஆனால் நான் என் மாணவர்கள் யாரையும் அடிப்பதில்லை என்ற கொள்கையோடு இருப்பவன்.

’உன் பெயரென்ன தம்பீ?’ என்றேன் நான்.

‘கனியமுதன் சார்’.

‘கனியமுதா. இந்த வால்தனமெல்லாம் இந்த வகுப்பில் செல்லாது.  உடனே பெஞ்சு மேல் ஏறி நில்.’

அன்று அந்த வகுப்பு முடியும் வரைக்கும் பெஞ்சு மேல் நின்றான். அது தான் ஆரம்பம்.

சில நாட்கள் கழித்து, ஒரு தடவை பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழர் பண்பாடு பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருந்தேன்.

‘அப்போது தமிழர்கள் வணிகத்தில் சிறந்து விளங்கினார்கள். அமைதியாகவும், அன்பாகவும், மரியாதையாகவும் வணிகம் செய்தார்கள். உதாரணத்துக்கு, அவர்கள் இல்லை என்ற சொல்லை பயன்படுத்த மாட்டார்கள். ஒரு கடையில் போய் உப்பு இருக்கிறதா என்று கேட்டால், அந்த கடையில் அப்போது உப்பு இல்லாவிட்டால், “அய்யா! அரிசி இருக்கிறது, எண்ணெய் இருக்கிறது, வாங்குகிறீர்களா?” என்பார்கள்.  அதாவது மறைமுகமாக, உப்பு தங்களிடம் இல்லை என்று தெரிவிப்பார்கள். இவ்வாறாக “இல்லை” என்று சொல்வது அவ்வளவு பண்பான விஷயமில்லை என்று நினைத்தார்கள்’

பாடத்தை நடத்தி முடித்தேன். வகுப்பு முடிய இன்னும் பத்து நிமிஷம் இருந்தது. புதிதாக அடுத்த பகுதியை நடத்துவதற்கு பதிலாக, யாராவது ஒரு மாணவனை அழைத்து தற்போது நடத்திய பாடத்தையையே, வகுப்பு முழுதும் கேட்குமாறு, எழுந்து நின்று, உரக்க படிக்க சொல்லலாம் என்று நினைத்தேன். சில சமயம் நான் இவ்வாறு செய்வதுண்டு.

‘தம்பி, கனியமுதா. எழுந்து நின்று தற்போது நான் நடத்திய பாடத்தை படி’

கனியமுதன் திடுக்கென்று எழுந்து நின்றான். அவன் சற்றும் இதை எதிர்பார்க்கவில்லை போலும். பிறகு சுதாரித்துக்கொண்டு பக்கத்தில் இருந்த மாணவனின் தமிழ் புத்தகத்தை லபக்கென்று பிடுங்கினான். பிறகு உடனே மளமளவென்று படிக்க ஆரம்பித்தான்.

‘இரு! இரு!. ஏன் அவன் புத்தகத்தை பிடுங்கிவைத்துக்கொண்டு படிக்கிறாய். உன் தமிழ் புத்தகம் எங்கே?’

கனியமுதன் திறுதிறுவென முழித்தான்.

‘கேட்கிறேன் இல்லே? சொல்லு! உன் தமிழ் புத்தகம் எங்கே?’

சிறிது தயக்கத்தோடு சொன்னான், ‘அய்யா. என்னிடம் ஆங்கில புத்தகம் இருக்கிறது, மற்றும் கணக்கு புத்தகம் இருக்கிறது. அவை வேண்டுமா?’

வகுப்பறையே சிரித்தது. எனக்கும் சிரிப்பு வந்துவிட்டது. ஆனாலும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. என்ன இருந்தாலும் தவறல்லவா?

‘தமிழ் புத்தகம் இல்லாமல் ஏன் வந்தாய் பள்ளிக்கு? பெஞ்சு மேல் ஏறி நில்.’

தயக்கமே இல்லாமல் ஏறி நின்றான்.

‘அடுத்த வகுப்பு எந்த வகுப்பு?’

‘ஃபிஸிக்ஸ் சார்’, கிளாஸ் லீடராக இருப்பவன் பதில் சொன்னான்.

‘சரி. இவன் இந்த வகுப்பு மட்டுமில்லாமல் அடுத்த வகுப்பு முழுதும் பெஞ்சிலே நிற்கவேண்டும். உங்கள் இயற்பியல் ஆசிரியரிடம் நான் சொன்னாதாக சொல்’

அன்று மதியம் ஆசிரியர்கள் அறையில் அமர்ந்திருந்தேன். இயற்பியல் ஆசிரியர் உள்ளே வந்தார்.

‘சார், இன்னைக்கு காலையில பதிணொண்னு ஸீ செக்‌ஷன் ஸ்டூடண்ட் ஒருத்தனை நீங்க  பெஞ்சு மேல நிக்க வைச்சீங்க போல!’

‘யாரு, கனிமுதனைத்தானே சொல்றீங்க? ரொம்ப சேட்டை சார்’

‘சரியா சொன்னீங்க சார். என் கிளாஸ்லேயும் அவன் பயங்கர சேட்டை. எவ்வளவோ திட்டிப் பார்துட்டேன். ஒண்ணும் அவனுக்கு உறைக்க மாட்டேங்குது. ”டேய்! நீ கண்டிப்பா மாடு மேய்க்கத்தாண்டா போவே”ன்னு திட்டறேன். அதுக்கு ஒரு சிரிப்பு சிரிச்சிக்கிறான். “பொறம்போக்கு மாதிரி நடுத்தெருவுலதாண்டா நீ நிக்கப்போறே”ன்னு சொல்றேன். அதுக்கும் ஏதோ அவார்டு வாங்கிற மாதிரி சிரிச்சிக்கிறான். இவனை இன்னும் என்ன தான் திட்டறது சார்?’

அமைதியாக சிரித்துக்கொண்டேன்.

‘ஏன் சார் எதுவும் பதில் பேச மாட்டேங்கிறீங்க’

‘இல்லை சார். சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?’

‘தப்பாவா? உங்களையா? அட சொல்லுங்க சார்?’

‘அதாவது, பொதுவா, மாணவர்களை அந்த மாதிரி  திட்டறது சரியில்லைங்கிறது என்னோட கருத்து சார். “மாடு மேய்க்கத்தான் போறே, நடுத்தெருவுலதான் நிக்கப் போறே”ன்னு நாம்ப திட்டி, அது பலிச்சிடுச்சின்னா? அது பாவம் தானே சார்? பெத்தவங்க எவ்வளவு கனவோட அவங்க பிள்ளைங்களை நம்ப கிட்ட அனுப்பி வைக்கிறாங்க. அந்த கனவையெல்லாம் உடைக்கிற மாதிரி நாம்பளே இந்த மாதிரி திட்டறது சரியில்லை சார்.  இதே வார்த்தைங்களை மத்தவங்க சொன்னா அது வெறும் திட்டு தான். ஆனா ஒரு ஆசிரியர் சொன்னா அது சாபம். ஏன்னா ஆசிரியர்ங்கிறது ஒரு புனிதமான பதவி. அதனால நான் வெறும் பெஞ்சு மேல நிற்கவைக்கிறதோட சரி. திட்டறதெல்லாம் செய்வதில்லை’ என்று மிக உறுக்கமாக சொல்லி முடித்தேன்.

சொல்லிவிட்டு அவரை பார்த்தேன். அவருக்கு என் வயதுதான் இருக்கும். சிறிது நேரம் அவரும் என்னையே பார்த்தார். சில நொடிகள் அமைதியாக கழிந்தன. பிறகு திடீரென அவர் ஒரு வெரிச்சிரிப்பு சிரித்தார்.

‘ஹா ஹா ஹா. அட போங்க சார். நாங்கள்ளாம் சீரியஸாவா திட்டறோம்? அந்த பசங்க நல்லா இருக்கனும்னு தானே திட்டறோம். இதெல்லாம் பலிக்காது சார். எனக்கு அடுத்த கிளாஸூக்கு நேரமாயிடுச்சு’ என்று சொல்லியபடியே எழுந்து போனார்.

நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

பிறகு நாட்கள் உருண்டோடின. கனியமுதனும் பலமுறை வால்தனம் பண்ணிக்கொண்டே இருந்தான். அவ்வளவு முறையும் பெஞ்சில் நிற்க வைத்தேன். இதற்கெல்லாம் சிகரம் வைத்ததை போல் ஒரு நிகழ்ச்சி நடந்தது.

அப்போது அவன் பன்னிரெண்டாம் வகுப்பு. ’குற்றால குறவஞ்சி’ என்கிற பாடலைப்பற்றி நடத்தினேன்.

”வானரங்கள் கனிகொடுத்து மந்தியோடு கொஞ்சும்
மந்தி சிந்தும் கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்”

’அதாவது, வானரங்களாகிய ஆண் குரங்குகள், தங்கள் காதல் மந்திகளாகிய பெண் குரங்குகளுக்கு நிறைய கனிகளை பறித்து வந்து கொடுக்குமாம். அதை மந்திகள் கடித்து தின்ன தொடங்குமாம். அப்போது அந்த ஆண் குரங்குகள், தங்கள் காதல் மந்திகளால் கடிபட்ட எச்சில் கனிகளை தங்களுக்கு கொடுக்குமாறு கெஞ்சுமாம். ஆஹா! எவ்வளவு அழகான வரிகள். எத்தனை தடவை நடத்தினாலும் அலுக்காத பாடலிது. மாணவர்களே, இந்த மாதிரியான பாடல்களை படிக்கும் போது உங்களுக்கே கவிஞராக தோணவில்லையா? ஆகி இது போல் பாடல்கள் எழுதவேண்டும் என்று தோணவில்லையா’ என்று உருகினேன்.

‘களுக்’ என்ற சிரிப்பு சத்தம் கேட்டது.

‘யாரது சிரித்தது?’

கனியமுதனின் அருகில் இருந்த மாணவன் எழுந்து நின்றான்.

’ஏன் சிரித்தாய்?’

‘சார். கனியமுதன் இதே மாதிரி ஒரு பாட்டை உண்டாக்கி என் காதிலே சொன்னான் சார். எனக்கு சிரிப்பு வந்திடுச்சி சார்.’

நான் கனியமுதனையையே பார்த்தேன். வகுப்பறையில் உள்ள அனைவருமே அவனை பார்த்தனர். மிகுந்த தயக்கத்துடன் கனியமுதன் எழுந்து நின்றான்.

‘எங்கே! உனது கவிதையை சொல்லு’ என்றேன்.

‘சார். வேணாம் சார்’

‘இப்போ சொல்லுறியா இல்லையா?’

‘சொல்லிடறேன் சார்’ என்றவன், பிறகு நமுட்டு சிரிப்புடன் சொல்ல ஆரம்பித்தான்.

“வாசுதேவன் கனி கொடுத்து மஞ்சுவோடு கொஞ்ச
மஞ்சு சொல்லும் மொக்கை-ஜோக்குக்கு வாசுதேவன் சிரிக்க”

..என்று ஆரம்பித்தான். வகுப்பறையே சிரிப்பால் அதிர்ந்தது. அதிலும் குறிப்பாக வாசுதேவன் என்கிற மாணவனை பார்த்தும், மஞ்சு என்கிற மாணவியை பார்த்தும். எனக்கு என்ன பண்ணுவதென்றே புரியவில்லை. மஞ்சுவைப் பார்த்தேன். ஏதோ அவார்டு வாங்கிய மாதிரி புன்னகைத்துக் கொண்டிருந்தாள். வாசுதேவனைப் பார்த்தேன். வெட்கத்தால் நாணி தலைகுனிந்திருந்தான். கலிகாலமடா என்று நினைத்துக்கொண்டேன். பிறகு மஞ்சுவை பார்த்துக்கேட்டேன்...

‘மஞ்சு! என்னம்மா இது?’

‘அதெல்லாம் ஒண்ணுமில்லை சார். ஒருநாள் கிளாஸில் லஞ்ச் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது, வாசுதேவன் அவன் கொண்டுவந்திருந்த கிரேப்ஸ்ஸை எனக்கு ஷேர் பண்ணினான். அதைத்தான் கனியமுதன் கிண்டல் அடிக்கிறான் சார்’ என்று பட்டென்று பதில் சொன்னாள்.

பிறகு வாசுதேவனை நோக்கினேன்.

‘வாசுதேவா என்னப்பா இது?’

வாசுதேவன் ரொம்பவே வெட்கபட்டுக்கொண்டான். அவனை எழுப்பி நிக்க வைப்பதே பெரும்பாடாக இருந்தது. ஒருவழியாக எழுந்தவன், நேராக என்னைப் பார்காமல், தரையப் பார்த்துக்கொண்டே மெதுவாக பேசினான்.

‘மஞ்சு சொல்ற ........ஹி..ஹி’ என்று எதுவோ சொன்னான்.

‘அட. சத்தமா சொல்லப்பா’ என்றேன்.

‘மஞ்சு சொல்ற ஜோக்கு எல்லாமே நல்ல ஜோக்கு சார். மொக்கை ஜோக்கு கிடையாது சார்..ஹி..ஹி’ என்று வெட்கத்தோடு உளறினான். இந்த தடவை வகுப்பறை மேலும் சிரித்து அதிர்ந்தது.

இவ்வளவு களேபரத்துக்கும் காரணமான கனியமுதனைப் பார்தேன். தேசியவிருது பெற்ற பாடலாசிரியர் போல் முகத்தில் வெற்றிப் புன்னகையோடு இருந்தான்.

‘கனியமுதா! பெஞ்சு மேல் நில்’

’இதோ சார்’ என்று உடனே தாவி ஏறினான். அவனுக்கு அது ரொம்பவே பழக்கமாகியிருந்தது.

நான் கிளாஸ் லீடரை நோக்கினேன்.

‘இவன் இன்று முழுதும் பெஞ்சு மேல் நிற்க வேண்டும். இன்று வருகிற அனைத்து ஆசிரியர்களிடமும் சொல்’ என்றேன்.

இவ்வாறாக பள்ளி வரலாற்றிலேயே, ஒரு நாள் முழுதும் பெஞ்சில் நிற்கவைக்கப் பட்ட ஒரே மாணவன் அவன் தான் என்று சாதனை படைத்தான்.

அடுத்த நாள் ஆசிரியர்கள் அறையிலே மற்ற ஆசிரியர்கள் என்னிடம் பேசினார்கள்.

‘சார், அவனுக்கு நாலு அறை கொடுக்க வேண்டியது தானே; அவன் உருப்படமாட்டான் சார்; அவன் மாடு மேய்க்கத்தான் லாயக்கு சார்; அவன் நடுத்தெருவுல தான் நிக்கப் போறான் சார்’ என்றெல்லாம் வசை பாடினர்.

இயற்பியல் ஆசிரியர் தான் உதவிக்கு வந்தார்.

‘அப்படியெல்லாம் திட்டாதீங்க சார். அப்படி நாம்ப எல்லாம் திட்டினா பலிச்சிடுமாம். அதனால தான் இவரு பெஞ்சுல மட்டும் நிக்க வைக்கிறாரு’ என்று சொல்லிவிட்டு ‘ஹா.ஹ்..ஹா’ என்று சிரித்தார்.

இவர் எனக்கு சப்போர்ட் பண்றாரா, இல்லை கிண்டல் பண்றாரா என்று குழம்பி போனேன்.


...
...


’அப்பா!’

‘ம்’

‘அப்பா! அப்பா! அப்பா!’

நினைவுகள் கலைந்து நிகழ்காலத்துக்கு வந்தேன். எதிரே என் மகள் நின்றுக்கொண்டிந்தாள்.

‘என்னம்மா?’ என்றேன்.

‘என்னப்பா. உட்கார்துக்கிட்டே தூங்குறீங்க?’

‘இல்லைம்மா. பழைய நினைப்பு ஒண்ணு வந்துச்சு. அப்படியே கண்ணயர்ந்திட்டேன் போல’

பிறகு சாயந்திரம் வந்தது.

கனியமுதனும் வந்தான். ஆள் வாட்ட சாட்டமாக வளர்ந்திருந்தான். ஜீன்ஸ் டீ ஷர்ட்டில் ஜம்மென்று இருந்தான். என் காலில் விழுந்து ஆசி பெற்றான். அனைவரிடமும் கலகலவென பேசினான். நான் மற்ற ஆசிரியர்கள் இவனை எப்படியெல்லாம் ஒரு காலத்தில் திட்டினார்கள் என்று எண்ணிப் பார்த்துக்கொண்டேன். குறிப்பாக இயற்பியல் ஆசிரியரை நினைத்துக் கொண்டேன். எத்தனை திட்டுகள்! ”பொறம் போக்கு! மாடு மேய்க்கத்தான் லாயக்கு! நடுத்தெருவுல தான் நிக்கப் போறான்”. நல்ல வேளை இவையாவும் பலிக்கவில்லை.

மெதுவாக கனியமுதனிடம் கேட்டேன். ‘இப்போ என்னப்பா பண்ணுகிறாய்?’

‘ஸாஃப்டுவேர்ல தான் சார் இருக்கேன். தெரிஞ்ச ஒரு கன்சல்டிங் கம்பெனி மூலமா யூஸ்ஸுக்கு ரெண்டு வருஷம் முன்னாடி வந்தேன். ஆனா என் நேரம் பாருங்க சார். வந்ததிலேர்ந்து எனக்கு சரியாக எந்த ஒரு கிளையண்ட் பிராஜெக்டும் அமைஞ்சதில்லை. எல்லாம் சின்ன சின்ன பிராஜெக்டாத்தான் இது வரை அமைஞ்சிருக்கு. அடிக்கடி பிராஜெக்ட் முடிஞ்சு பெஞ்சுக்கு அனுப்பிடறாங்க. இப்போ கூட ஒரு ரெண்டு மாசமா பெஞ்சுலத்தான் இருக்கேன் சார்’

எனக்கு தலை சுற்றியது. காதினுள் இயற்பியல் வாத்தியார் வந்து சத்தமாக ‘ஹா..ஹ்..ஹா’ என்று என்னைப் பார்த்து சிரித்தார்.

Comments