சிறுகதை : வரதட்சிணை

சோபாவில் ஜம்பமாக சாய்ந்துகொண்டு உட்கார்ந்துகொண்டிருந்தாள் அந்த பெண்மணி. மாப்பிள்ளையின் தாய் என்பதால் ஒரு பெருமிதம். பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் அவள் கணவர். 'கெக்க பிக்க' என்று சிரித்துக்கொண்டே, தட்டில் இருந்த பஜ்ஜிகளை காலி பண்ணிக்கொண்டிருந்தார். மாப்பிள்ளையும் கம்பீரமாக முகத்தை தூக்கிகொண்டு உட்கார்ந்திருந்தார். கவர்ன்மெண்ட் வேலையில் இருப்பவர் ஆயிற்றே.


"அப்புறம், எங்களுக்கு பொண்ணை ரொம்ப புடிச்சிருக்கு. தரகர் நாங்க எவ்வளவு வரதட்சினை எதிர்பார்கிறோம்னு சொல்லியிருப்பார். அதுல ஒரு பவுன் கூட குறையாம கொடுத்திடுங்க" என்றாள்.

"ஒரு பத்து பவுன் குறைக்க கூடாதா" என் அப்பா தலையை சொரிந்து கொண்டு நின்றார்.

"நோ, நோ நோ. கொஞ்சம் கூட குறைக்க மாட்டோம். என் புள்ளை என்ன அவ்வளவு சாதாரணமா? அவன் ஒரு கவர்மெண்ட் எம்பிளாயீ. ஸ்டேபிள் வெலை. அதனால நாங்க கேட்ட வரதட்சிணையை முழுக்க நீங்க கொடுத்தாதான் எங்களுக்கு கவுரமா இருக்கும்" என்று அடித்து சொன்னாள் அந்த பெண்மணி.

"சரீங்க. ஒரு இரண்டு நாள் டைம் கொடுங்க. நான் எவ்வளவு புரட்ட முடியுமோ, பார்த்துட்டு சொல்றேன்" என்றார் என் அப்பா.

எனக்கு பற்றியெரிந்து கொண்டு வந்தது. என்னவோ எங்க வீட்டில் அவங்க அதிகாரம் பண்ணுவது, என் அப்பா அவங்க வேலைகாரன் போல தாழ்ந்துபோய் பதில் சொல்வது எனக்கு அறவே புடிக்கவில்லை. ஆனாலும் எனக்கு கோவம் வரவில்லை. ஏனென்றால் இன்று காலைதான் என் கூட வேலை செய்யும் ரமேஷ், என் மேல் ரொம்ப நாளாகவே அவனுக்கிருக்கும் காதலை சொன்னான்.

ரமேஷை என் மனதுக்குள்ளே வைத்திருந்தவள் நான். இத்தனை நாளாகவே எனக்கு ரொம்ப தயக்கம். அதனாலே நான் அதை வெளியே காட்டிக்கொண்டதில்லை. இப்போது ரமேஷே ஒரு வழியாக வந்து சொல்லவே, நான் துள்ளிகுதித்து ஓகே சொல்லிவிட்டேன்.

மேலும் எனது அப்பா எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துவிட்டார் என்று நான் சொன்னதுமே அவன் வெகு சீக்கிரம் என்னை பெண் கேட்க வருவதாக சொல்லியிருக்கான். நானும் இன்னாரை காதலிக்கின்றேன் என்று சொன்னால் போதும், எனது அப்பா ஓகே சொல்லிவிடுவார். அவருக்கு என் மேல் அப்படி ஒரு பாசமென்பது எனக்கு நன்றாக தெரியும்.

ஆனால் சாயந்திரம் சீக்கிரமே வந்து அவரிடம் சொல்லி இந்த பெண் பார்க்கும் படலத்தை கேன்ஸல் பண்ணிவிடலாம் என்று பார்த்தால், இவர்கள் அதுக்குள்ளே வந்து உட்கார்ந்திருக்கிறார்கள்.

அப்பாவிடம் ஒரு வார்த்தை மத்தியானமே போன் பண்ணியிருந்திருக்கலாம். ஆனால் என் காதல் விஷயத்தை போனில் சொல்வது அவ்வளவு நல்லதில்லை என்று எண்ணியதால் நான் அவ்வறு செய்யவில்லை.

ஆதலால் தற்போது வந்திருக்கும் இந்த கும்பல் நடத்தும் அதிகார தோரணையை பார்த்தால் எனக்கு இந்த பெண் பார்க்கும் படலமே எனக்கு தமாஷாக இருந்தது. ஆனாலும் எரிச்சலாக இருந்தது.

உடனே மனதில் ஒரு யோசனை தோன்றியது. ரமேஷ¤க்கு போன் பண்ணினேன். என் ஐடியாவை சொன்னேன். அவனும் சிரித்துகொண்டே 'உடனே வருகின்றேன்' என்றான்.

சிறிது நேரத்துக்குள் அவன் வீட்டுக்குள் நுழைந்தான்.

"அப்பா இவர் எனது பிரண்டு மாலாவின் அண்ணன் விஷால். நேத்து நானும் மாலாவும் ஷாப்பிங் போகும்போது மாலா தவறுதலா அவளுடைய பர்ஸை என்னிடம் விட்டுவிட்டாள். அதை வாங்கிகொள்ள தனது அண்ணனை இன்று அனுப்புவதாக சொன்னாள். எனக்கு மறந்தே போய்விட்டது" என்றேன்.

"பெரியவங்க எல்லாரும் மன்னிக்கனும், நீங்க ஏதோ முக்கியமான விஷயத்துல இருக்கீங்க போல. மாலாதான் காலையிலே உங்க பொண்ணுகிட்டே சொல்லிட்டாளேன்னு நான் ஒரு போன் கூட பண்ணாம வந்திட்டேன். நான் வேணும்னா அப்புறம் வரட்டுமா" என்று ரமேஷ் பணிவுடன் சொன்னான்.

ஆனால் அவன் சில்மிஷமாக சிரித்தது எனக்குத்தானே தெரியும்.

"அட பரவாயில்லை தம்பி, உட்காருங்க" என்றார் என் அப்பா.

"அப்பா. விஷால் போலீஸ் துறையில இருக்கார்" என்றேன்.

அந்த மாப்பிள்ளையின் அம்மா இப்போது என்னை கலவரமாக பார்த்தாள்.

"அப்படியா ரொம்ப சந்தோஷம். போலிஸ்ல என்னவா இருக்கீங்க?" இது என் அப்பா.

"வரதட்சிணை ஒழிப்பு பிரிவில் இருக்கின்றேன் சார்"

"..."

பிறகு ஒரு நிமிடம் அந்த அறையில் அமைதி நிலவியது.

"ஹி, ஹி..அப்போ நாங்க வர்றோமுங்க" என்று அந்த அம்மாள் வழிந்து கொண்டே எழுந்தாள்.

"அப்போ நீங்க கேட்டது?" என்று என் அப்பா மெதுவாக இழுத்தார்.

"அய்யய்யோ. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. (ரமேஷை பார்த்துக்கொண்டு) நாங்க எதுவும் கேட்கலியே. சொல்லியனுப்புங்க. நாங்க இப்போ போயிட்டு அப்புறம் வர்றோம்" என்று கிளம்பினார்கள்.

அவர்கள் போனதும் நானும் ரமேஷ¤ம் விழுந்து விழுந்து சிர்த்தோம். என் அப்பாவுக்கு புரியவில்லை.

"அப்பா இவர் மாலாவின் அண்ணன் கிடையாது. இவர் பெயர் ரமேஷ். என் கூட வேலை செய்யறார். இவரைத்தான் எனக்கு கல்யாணம் பண்ணிக்க ஆசை. மீதியெல்லாம் டின்னர் சாப்பிட்டுகிட்டே பேசலாம்" என்றேன்.

"ஆமாம் சார். எனக்கும் உங்க பொண்ணை கல்யாணம் கட்டிக்கினும்னு ஆசை. ஆனா எனக்கு வரதட்சிணையா ஒண்ணே ஒண்ணு மட்டும் கொடுத்துடனும்" என்றான் ரமேஷ்.

நானும் எனது அப்பாவும் அவனை நோக்கினோம்.

"அட, ஒரு வண்டி நிறைய உங்க ஆசீர்வாதத்தை மட்டும் வரதட்சிணையா, உங்க பொண்ணுகூட அனுப்பிவைங்க" என்றான் அவன் சிரித்துக்கொண்டே.
இப்போது நாங்கள் அனைவரும் சிரித்தோம்.

Comments