சிறுகதை : காக்கா.. பாட்டி.. வடை.. நரி..
ஒரு ஊருல ஒரு பாட்டி இருந்தாங்க. அவங்க தினமும் நூறு வடையை சுட்டுகிட்டு பக்கத்து ஊருக்கு எடுத்துக் கொண்டு போய் வித்து, வாழ்ந்துகிட்டு இருந்தாங்க.
பக்கத்து ஊருக்கு போகிற வழியில ஒரு காடு இருந்தது. அந்த காட்டை தினமும் கடந்துதான் இவங்க பக்கத்து ஊருக்கு போக முடியும். காட்டை கடக்குற வழியில ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அதுல இவங்க தினமும் கொஞ்ச நேரம் தூங்கிட்டுதான் பக்கத்து ஊருக்கு போவாங்க.
ஒரு நாள் அப்படி தூங்கிகிட்டு இருக்கும் போது, ஒரு காக்கா வந்தது. வடைகளை பார்த்தது. "ஆஹா! இன்னைக்கு முழுதும் நம்ப சாப்பாட்டு பிரச்சினை தீர்ந்தது"ன்னு நினைச்சுகிட்டே, நைஸா பறந்து ஒரு வடையை வாயால கவ்வி எடுத்துகிட்டது.
அப்படியே கொஞச தூரம் பறந்து போயி, யாரும் இல்லாத இடமா பார்த்து, ஒரு மரத்துல உட்கார்ந்தது. அப்ப அந்த பக்கம் ஒரு நரி வந்தது. காக்கா வாயில இருந்த வடையை பார்த்தது.
உடனே அதுக்கும் வடை சாப்பிடனும்னு ஆசை வந்திடுச்சு.
அதனால, அந்த காக்காவை பார்த்து நரி சொன்னது, "காக்கா..! காக்கா..! நீ ரொம்ப அழகா இருக்கே. ஒரு பாட்டு பாடேன்" என்று.
தன்னை அழகுன்னு நரி சொன்னதும் காக்காவுக்கு ரொம்ப பெருமை தாங்கவில்லை. உடனே அது உச்சஸ்தாயில பாட ஆரம்பிச்சதது.
அவ்வளவு தான்.
வடை 'டொம்னு' கீழ விழுந்தது. நரி வடையை எடுத்துக்கொண்டது.
காக்காவுக்கு மனசு தாங்கலை. இப்படி ஏமாந்துட்டமேன்னு அழுதது.
அப்ப நரி சொல்லியது,
"காக்கா..! காக்கா..! நான் ஒண்ணும் உன்னை ஏமாத்த வரலை. இந்த வடை உனக்கு எங்க கிடைச்சதுன்னு மட்டும் சொல்லிடு. நான் உனக்கு இதை திருப்பி கொடுத்துடறேன்" என்று.
காக்காவும் சொல்லியது. நரியும் வடையை திருப்பி கொடுத்தது.
கொடுத்திட்டு அவசர அவசரமா ஆலமரத்தடிக்கு வந்தது. அந்த பாட்டி அப்போதுதான் தூக்கத்துலேர்ந்து முழிச்சாங்க. முழிச்சவங்க, தன்னுடைய கூடையை பார்த்தாங்க. அழகா அடுக்கி வைச்சிருந்த வடையெல்லாம் கலைஞ்சி இருந்துச்சு.
'அலுங்காம நலுங்காமத்தானே கூடையை கொண்டாந்தேன், பின்னே எப்படி வடையெல்லாம் கலைஞ்சிருக்குன்னு ' பாட்டிக்கு சந்தேகம் வந்தது. உடனே வடையெல்லாம் எண்ணிப் பார்த்தாங்க. ஒரு வடை குறைஞ்சிப்போனதை கண்டுபிடிச்சாங்க.
ஆனா அது எப்படி குறைஞ்சுப்போச்சுன்னு ஆராயவே இல்லை. 'சரி, எங்கியாவது தொலைஞ்சிருக்கும்னு' விட்டுட்டாங்க. அப்புறம் கூடையை தூக்கிகிட்டு எழுந்து போயிட்டாங்க.
இதை அந்த நரி கவனிச்சுது. இவங்க அடிக்கடி இந்த பக்கம்தான் வருவாங்கன்னு அதுக்கு தோணிச்சு. அதனால மறுநாள் அதே இடத்துல வந்து ஒளிஞ்சிக்கிலாம்ன்னு பிளான் போட்டது.
மறுநாளும் வந்தது. நரியும் வந்து ஒளிஞ்சுகிட்டு காத்துகிட்டு இருந்தது.
பாட்டியும் வந்தாங்க. கூடையை இறக்கி வைச்சாங்க.
நரி, மெதுவா பாட்டி கிட்ட போய் ஒரு வடைக்கு பதிலா இரண்டு வடையை எடுத்துகிட்டு போயிடுச்சு. ஒரு மறைவான இடமா பார்த்து உட்கார்ந்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தது.
அப்போ ஒரு ஓநாய் அந்த பக்கம் வந்தது. தனக்கு அந்த இரண்டு வடையும் வேணும்னு தகராறு பண்ண ஆரம்பித்தது. ஆனா நரி கொஞ்சமும் அசரவில்லை.
'உனக்கு அரை வடைதான் தர முடியும்'ன்னு சொல்லியது.
'நீ என்ன தர்றது. நானே உன் கிட்டேயிருந்து இரண்டு வடையையும் புடுங்கிக்கிறேன்னு' ஓநாய் மல்லுக்கு நின்றது.
அதற்கு நரி ரொம்ப பொறுமையா சொன்னது, 'நீ நினைச்சா என்னிடமிருந்து இந்த இரண்டு வடையை மட்டும் தான் புடுங்க முடியும். ஆனா, நான் சொல்றபடி கேட்டா உனக்கு இப்பொ அரை வடை கிடைக்கும். கூடவே இந்த வடையெல்லாம் எங்கேயிருந்து கிடைச்சதுங்கிற தகவலும் கிடைக்கும். அதை வைச்சுகிட்டு நாளைக்கு நீ மூணு வடைகூட தின்னலாம். ஆக எது வேணும்?
இரண்டு வடை மட்டுமா அல்லது அரை வடையோடு இந்த வடையெல்லாம் எங்கேயிருந்து கிடைச்சது தகவலுமா?
ஓநாய் யோசிச்சது. "இரண்டு வடைன்னா இன்னைக்கு மட்டும்தான். ஆனா இந்த வடையெல்லாம் எங்க கிடைக்குதுன்னு தெரிஞ்சா நாளைக்கு நிறைய வடை கிடைக்கும்" பிறகு சொல்லியது
'சரி. எனக்கு அரை வடை போதும். ஆனா வடை கிடைச்ச இடத்தையும் சொல்லிடு'.
நரியும் அவ்வாறே செய்தது.
இதற்கிடையில் பாட்டி முழிச்சிக்கிட்டாங்க. வடையெல்லாம் இன்னைக்கும் கலைஞ்சி இருப்பதை பார்த்தாங்க. அதனால அவங்க இன்னைக்கும் எண்ணிப் பார்த்தாங்க. இரண்டு வடை குறைஞ்சிருப்பதை கண்டுபிடிச்சாங்க. ஆனாலும் அதைப்பத்தி அவங்க ரொம்ப ஆராயலை.
அதனால மறுநாள் ஓநாயி வந்து மூணு வடை திருடியது.
ஆனாலும் பாட்டி கவனக்குறைவாகவே இருந்ததினால்...
அதற்கடுத்த நாள் வேறொரு மிருகம் வந்து நாலு வடை திருடியது.
அதற்கடுத்த நாள் மற்றொரு மிருகம் வந்து ஐந்து வடை திருடியது...
"சரி அப்புறம் என்னாச்சு" என்றார் பன்னீர்நாதன்.
பன்னீர்நாதன் என்பவர் எங்கள் கிராமத்து பெரிசுகளில் ஒருவர். பாரதிராஜா, பாக்கியராஜ் படங்களில் கிராம பஞ்சாயத்து சீன்கள் வருமே, அந்த மாதிரி எங்க ஊரில் நடக்கும் பஞ்சாயத்துகளில், நாட்டாமைக்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு தீர்ப்பு சொல்ல உதவுபவர்களில் அவரும் ஒருவர். என்னை விட முப்பது வயது மூத்தவர். அவரைப் பொறுத்த வரைக்கும் நான் ஒரு வேலை வெட்டியும் இல்லாதவன்.
நான் பிஏ படித்துமுடித்து ஆறு மாதம் தான் ஆகிறது. இன்னும் வேலை கிடைக்கவில்லை என்று சொல்வதைவிட இன்னும் வேலையே தேட ஆரம்பிக்கவில்லை என்பது தான் உண்மை.
நன்றாக யோசித்து பார்த்ததில் வேலைக்கு போவதை விட எழுத்தாளனாக ஆனால்தான் என் உள்மனது மகிழ்ச்சி கொள்ளும் என்று தோன்றியதால், வேலை தேடுவதையே ஒரு வருடத்திற்கு
தள்ளிப்போட்டுவிட்டேன். எழுத்தாளனாக மாற முழுநேரமும், ஒரு வருடம் முழுக்க முயற்சி செய்து பார்ப்பது. அது முடியவில்லை என்றால் பிறகு கிடைத்ததை வைத்துக்கொண்டு வாழ்வது.
இதுதான் என் முடிவு.
ஏனென்றால் எனக்கு தெரிந்த பலபேர் வெறும் சம்பளத்திற்காகத்தான் வேலை செய்கிறார்கள். விசாரித்தால் உள்ளுக்குள் வேறொரு ஆதங்கம் இருக்கும். 'சிறந்த பிண்ணனி பாடகனாகனும்கிறது தான் என் கனவு. நம்மால அதெல்லாம் முடியுமா? அதுவும் பொண்டாட்டி பிள்ளைங்க எல்லாம் என்னை நம்பியிருக்கும் போது! அதனால்தான் அக்கவுண்டெண்டா இந்த கம்பெனியில வேலைசெய்து பொழப்பை ஓட்டிகிட்டு இருக்கிறேன்' என்று சொல்பவர்களை நிறைய பார்த்திருக்கிறேன்.
அப்படி பாடகர்களாவதற்கு ஏதவது முயற்சி எடுத்தார்களா என்றால், அதுதான் கிடையாது. முதலில் கிடைத்த வேலையை வைத்துக் கொண்டார்கள். அப்புறம் அந்த வேலை அவர்களை நிரந்தரமாக வைத்துக்கொண்டது. அதனால்தான் நான் இந்த ஒரு வருடமாவது சிறந்த எழுத்தாளன் என்று பேர் வாங்குவதற்கு முயற்சி பண்ணபோகிறேன். அதற்கு நல்ல கதைகள் எழுதவேண்டும். பிறகு பெரிய பெரிய பத்திரிக்கைகள் அதை வெளியிட முன்வரவேண்டும். இது சாதரண காரியமல்ல. நிறைய உழைக்கவேண்டும். இந்த ஒரு வருடத்தில் ஒன்றும் நடக்கவில்லையென்றால் அப்புறம் கிடைக்கிற வேலையை பார்க்க வேண்டியதுதான். அட்லீஸ்ட் ஒரு முயற்சி பண்ணிய திருப்தியாவது இருக்கும். இதுதான் என் எண்ணம்.
ஆனால் இது என் அப்பாவுக்கு புரியவில்லை. இதை பற்றி தனது நண்பரான பன்னீர்நாதனிடம் புலம்பியிருக்கிறார். அப்படி எனது அப்பா புலம்பியதால், எனக்கு இலவச அறிவுரை சொல்லும் உரிமை தனக்கு இருப்பதாக பன்னீர்நாதன் அவர்களும் நினைக்க ஆரம்பித்துவிட்டார்.
'இப்படி கதை எழுதப்போறேன், எழுத்தாளனாகப்போறேன்னு வெட்டியா எழுதி தள்ளிகிட்டு இருக்கிறதை விட்டுவிட்டு வேற ஏதாவது உறுப்படியா செய்" என்று அவராகவே ஆலோசனை சொல்வார். வேறு வழியில்லை என்பதால் நானும் பொறுத்துக்கொள்வேன்.
இருந்தும் ஒரு நாள் பஞ்சாயத்து கூடும் நேரத்தில், 'சரி. நீ எழுதிய கதையில் ஒன்றை சொல்லேன். எப்படித்தான் இருக்கிறதென்று பார்ப்போம்' என்றார். பஞ்சாயத்து கூடும் நேரத்தில் கதைக்கு என்ன வேலை என்று கேட்கிறீர்களா? அவர் எப்பவுமே அப்படித்தான். பஞ்சாயத்துக்கு எப்போதும் சீக்கிரம் வந்துவிடுவார். பிறகு நாட்டாமை வரும் வரையில் யாரையாவது போட்டு படுத்திக்கொண்டிருப்பார்.
போன தடவை கூட பக்கத்து தெரு சின்னப்பாவை, 'நீ தான் பாடகனாகனும்னு சொல்லிகிட்டு திரியறயே, எங்கே நாட்டாமை வர்றதுக்குள்ள ஒரு பாட்டு பாடேன் பார்ப்போம்' என்று உசுப்பிவிட, சின்னாப்பாவும் தன்னுடைய திறமையெல்லாம் ஒன்று திரட்டி பெரும் ராகம் ஒன்றை பாடினான். ஆனால் இவர் நடுநடுவே, அத்தனை கும்பலுக்கு மத்தியில் அவன் பாட்டை கிண்டலடித்து அவனை அழும் நிலைக்கு தள்ளிவிட்டார்.
ஒருவேளை என்னையும் அவ்வாறே கிண்டலடிக்கலாம் என்று எண்ணினாரோ என்னமோ?
சரி. அவர் கேள்வி கேட்ட இடத்துக்கு வருவோம்.
"சரி அப்புறம் என்னாச்சு" என்று மீண்டும் கேட்டார் பன்னீர்நாதன்.
"எது என்னாச்சு" என்றேன்.
"சரியா போச்சு. இந்த சின்ன கேள்வி கூடும் உனக்கு புரியலையா? நீயெல்லாம் எழுத்தாளானாகி என்ன பண்ணப்போறியோ" என்று கிண்டலடித்தார். அவரை சுற்றியிருந்த கும்பல் சிரித்தது.
"கேள்வியை கொஞ்சம் விளக்கமா கேளுங்க" என்றேன்.
"அதான். ஒவ்வொரு மிருகமா வந்து பாட்டிகிட்ட இருந்து வடைகளை திருடிகிட்டு போகுது. பாட்டியும் கவனக்குறைவா இருக்கிறாங்க. அப்புறம் என்னாச்சு" என்றார்.
"அப்புறம் அவ்வளவு தான். அந்த பாட்டி திரும்ப திரும்ப ஏமாந்துகிட்டே இருக்காங்க. அதுதான் கதையோட முடிவு" என்றேன்.
"நம்புற மாதிரி இல்லியே" என்றார்.
"ஏது நம்புற மாதிரி இல்லை?"
"ஒருத்தர் திரும்ப திரும்ப ஏமாறுவது"
"ஏன் ஏமாறக்கூடாதா?"
"யாரும் அப்படியெல்லாம் திரும்ப திரும்ப ஏமாறமாட்டாங்க. எப்பேர்பட்ட இளிச்சவாயனும் ஒரு நாள் சுதாரிச்சுக்குவான். அதனால உன் கதை நம்புற மாதிரியில்லை" என்றார் ஒரே போடாக.
போட்டவர் கூட்டத்தை நோக்கி ஒரு வெற்றி சிரிப்பு சிரித்தார். அவர் சிரிப்பில் கேலியும் இருந்தது. கூட்டமும் சிரித்தது.
நான் பொறுமையா கேட்டேன், "இப்போ இந்த பஞ்சாயத்து எதுக்கு கூட்டறீங்க?"
"இது என்ன கேள்வி? வருகிற தேர்தல்ல நம்ப கிராமத்துல இருக்கிற எல்லாரும் சேர்ந்து, யாருக்கு ஓட்டு போடலாம்னு முடிவு பண்ணத்தான்"
"மூணு தடவைக்கு முன்னாடி நடந்த தேர்தல்ல யாருக்கு ஓட்டு போட்டீங்க?"
"கோபாலுக்கு போட்டோம். ஏன் கேட்கிறே? அப்போ நீ ரொம்ப சின்னப்பையன்"
"என்னை விடுங்க. ஏன் அவருக்கு போட்டீங்க?"
"நம்ப அமைச்சர் சண்முகலிங்கம் சொன்னாருன்னு போட்டோம். அவருடைய உதவியாளராக இருந்தவர்தான் கோபால். மேலும் என்ன இருந்தாலும் அமைச்சர், நம்ப சாதிசனத்தை சேர்ந்தவர் அல்லவா? அவர் சொல்றதை தட்டமுடியாதல்லவா?"
"சரி. அந்த தேர்தல்ல ஜெயிச்ச கோபாலு என்ன ஆனாரு?"
"ஆயிரக் கணக்கா ஊழல் பண்ணினாரு. அது எல்லோருக்கும் தெரிஞ்சு போயிடுச்சு. அதனால வேற வழியில்லாம அடுத்த தேர்தல்ல அவரை நிற்க விடாம, தன்னோட இன்னொரு உதவியாளரை நிற்க வைச்சாரு நம்ப அமைச்சர்"
"சரி அப்புறம்"
"அவர் நிற்க வைச்சவருக்கு தான் ஓட்டு போட்டோம். நம்ப அமைச்சர் பேச்சை மீறுவோமா? நம்ப சாதியாச்சே?"
"சரி அப்புறம் என்னாச்சு?"
"புதுசா வந்தவரு லட்சகணக்குல ஊழல் பண்ணினாரு. அதுவும் எல்லாருக்கும் தெரிஞ்சுப் போச்சு. அதனால மீண்டும் வேற வழியில்லாம அடுத்த தேர்தல்ல அவரையும் நிற்க விடாம, இன்னொரு உதவியாளரை நிற்க வைச்சாரு நம்ப அமைச்சர்"
"சரி அப்புறம் என்னாச்சு?"
"இவரு கோடிகணக்குல ஊழல் பண்ணினாரு. மேலும் நம்ப அமைச்சருடைய ஆளுங்கட்சி ஒன்ணும் சரியில்லாததால ஆட்சியையே டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க. இப்போ மீண்டும் தேர்தல் வந்திருக்கு"
"யாருக்கு ஓட்டு போடலாம்னு முடிவு பண்ண போறீங்க"
"இது என்ன கேள்வி. நம்ப அமைச்சர் சண்முகலிங்கம், ..ம்ம்ம்.. அவர் இப்போதைக்கு அமைச்சராக இல்லைன்னா கூடும், அவர் யாரை பார்த்து கையை காட்டறாரோ அவருக்குத் தான்"
"அப்படீன்னா என் கதையோட முடிவும் சரிதான்"
"என்ன சொல்ற?"
"திரும்ப திரும்ப எப்பவும் ஏமாறுபவங்க இருக்காங்கன்னு சொல்றேன்" என்று சொல்லிவிட்டு, நிமிர்ந்த தலையுடன் நடக்க ஆரம்பித்தேன்.
பன்னீர்நாதனுக்கு புரிந்ததுவிட்டது என்று நினைக்கின்றேன். ஏனென்றால் அவர் இப்பொழுது அவர் தலையை கவிழ்ந்து கொண்டு உட்கார்ந்திருக்கிறாரே.
Comments
Post a Comment