சிறுகதை : சாமியார்

அப்பப்பா! ரொம்ப கூட்டமா இருக்கு? இப்ப யாராவது உள்ளே போகமுடியும்னு நினைக்கிறீங்க?

தெரியலீங்க. நான் இதுவரைக்கும் உள்ளே போகனும்னு முயற்சி பண்ணதில்லை. அதனால எனக்கு தெரியாது.

அட என்னாங்க. அப்ப நீங்க சாமியாரை பார்க்க வரலியா?

இல்லீங்க.

அப்ப எதுக்கு இங்க வந்து உக்காந்திருக்கீங்க?

எங்க வந்து உட்கார்ந்திருக்கேன்?

என்னாங்க நீங்க? விளையாட்டுக்கார ஆளா இருக்கீங்க. இந்த சாமியாருடைய பேரை கேட்டாலே பெரிய பெரிய ஆளுங்க கூட கையெடுத்து கும்பிடுவாங்க. அப்பேர்பட்ட சாமியாருடைய ஆசிரமத்துக்கு கொஞ்சம் தள்ளி, எதிர்த்தாப்ல இருக்கிற மரத்தடி கீழ உக்காந்துகிட்டு, இப்படி தமாஷ் பண்ணறீங்களே?

ஓ! இங்க உட்கார்ந்திருக்கிறதை சொல்றீங்களா? சும்மா தான். எப்போவாவது நேரம் கிடைச்சுதுன்னா இங்க வந்து இந்த ஆசிரமத்துக்கு போறவர்றவங்களை பார்த்துகிட்டு இருப்பேன்.

எதுக்கு?

இல்லே. இவ்வளவு பேர் கூட்டம் கூட்டமா வர்றாங்களே, அப்படி அந்த ஆசிரமத்துல என்னதான் கிடைக்குதுன்னு பார்ப்பேங்க.

அட என்னாங்க. விவகாரம் புடிச்ச ஆளா இருப்பீங்க போல. ஆசிரமத்துல சாமியார் இருக்காரு. அதுவும் ரொம்ப பவர்·புல்லான சாமியார் அவரு. அவருகிட்ட போனா எல்லா பிரச்சினையும் தீர்த்து வைப்பாரு. அதனாலதான் நாங்க எல்லோரும் அவரை தரிசிக்க வர்றோம்.

ஓ! நீங்களும் சாமியாரை பார்க்கத்தான் வந்திருக்கீங்களா?

ஆமாங்க. நானும் என் பொண்டாட்டியும் வந்திருக்கிறோம்.

உங்க பொண்டாட்டியோட வந்திருக்கீங்களா? அவங்க எங்கே?

என் பொண்டாட்டியா? அவங்க ஆசிரமத்துக்குள்ளே போயிருக்காங்க? மத்தியானமே சீக்கிரமா வந்து அவங்களை உள்ளே அனுப்பிட்டேன்.

எதுக்கு?

சாயந்திரம் அவங்களுக்கு சாமியாரோட பூஜையிருக்கு?

நீங்க போகலையா?

இல்ல. இந்த பூஜை பெண்களுக்கு மட்டும் ஸ்பெஷலா சாமியார் பண்ணுவார். ரொம்ப நேரம் நடக்கும். பூஜை முடிஞ்சதும் நான் போய் என் பொண்டாட்டியை கூட்டிக்குவேன். இந்த மாதிரி ஒரு பூஜை பண்ணினா போதும். சாமியாரோட சக்தியால குடும்ப பிரச்சினையெல்லாம் தீர்ந்துடும்.

இந்த சாமியாருக்கு அவ்வளவு சக்தியிருக்கா?

என்னங்க இப்படி கேட்டுட்டீங்க? உதாரணதுக்கு இப்ப இந்த மரத்தையே எடுத்துக்கோங்க. ஆறு மாசத்துக்கு முன்னாடி இந்த மரம் பட்டு போய் செத்து போயிடுச்சு. இலையெல்லாம் உதிர்ந்து மொட்டையாயிடுச்சு. மரத்தை வெட்டிடலாம்னு எல்லாரும் முடிவு பண்ணிட்டாங்க. ஆனா ஒரு நாள் பாருங்க, திடீர்னு மரத்துக்கு உயிர் வந்துடுச்சு. பச்சை பச்சையா இலைங்கெல்லாம் துளிர ஆரம்பிச்சிடுச்சு. எல்லோருக்கும் ஒரே ஆச்சர்யம். விங்ஞானிங்கெல்லாம் வந்து ஆராய்ச்சி பண்ணி பார்த்துட்டு தலையை பிச்சிக்கிட்டாங்க. அப்பதான் நம்ப சாமியார் சொன்னாரு

என்ன சொன்னாரு?

ஒரு நாள் ராத்திரி யாருக்கும் தெரியாம இந்த மரத்துக்கிட்ட வந்து தன்னுடைய சக்தியெல்லாம் திரட்டி ஆசி வழங்கி மீண்டும் உயிர் வரவைச்சிருக்காருன்னு.

ஓ! அவ்வளவு தானா? நான் என்னாவோ, நான் இங்க வந்து உட்கார்ந்ததாலதான் இந்த மரத்துக்கு உயிர் வந்துச்சுன்னு நினைச்சேன்.

கிண்டல் பண்றீங்க போல. சரி நீங்க எந்த ஊரு?

எல்லா ஊரும் என் ஊருதாங்க.

என்னங்க. நான் சீரியஸா கேட்டா நீங்க ஏதோ நாடோடி மாதிரி பதில் சொல்றீங்க?

நானும் சீரியஸாதாங்க பதில் சொல்றேன். எல்லா ஊரும் என் ஊருதான்.

அப்படீன்னா, ஒவ்வொரு ஊருலயும் உங்களுக்கு சொந்தமா இடம் இருக்கா?

அப்படியும் சொல்லலாம்ங்க.

அப்படீன்னா இந்த ஊருல உங்க வீடு எது?

அதோ, அதான் என் வீடு.

எது? அந்த கோயிலா?

ஆமாம்.

அட போங்க. உங்ககிட்ட வந்து பேசிகிட்டு இருக்கேன் பாருங்க, என்னை சொல்லனும். வீடு எதுன்னு கேட்டா பக்கத்துல இருக்கிற நடராஜர் கோயிலை காட்டறீங்க. நீங்க என்ன சாமியாரா?

சாமியாருன்னும் சொல்லலாம். ஆட்டக்காரன்னும் சொல்லலாம். திருவிளையாட்டுக்காரன்னும் சொல்லலாம். கூத்தாடின்னும் சொல்லலாம் இல்லே வெட்டியானுன்னும் சொல்லலாம்ங்க.

விட்டா பரமசிவன்னும் சொல்லலாம்னு சொல்வீங்க போல.

அப்படியும் சொல்லலாம்.

யோவ். என்ன விளையாட்டா? நானும் பொறுமையா பேசிக்கினு இருக்கேன். நீ பாட்டுக்கும் எக்குதப்பா பேசிகிட்டு இருக்கியே.

(ஒரு மெல்லிய சிரிப்புடன்) ஏன் நான் பரமசிவனா இருக்ககூடாதா?

ஏன்யா? பொய் சொல்றதுக்கு ஒரு அளவில்லை? பரமசிவன்னு சொல்லலாம், சாமியார்னு சொல்லலாம்னு நீ பாட்டுக்கும் சொல்லிக்கிட்டு போறே? உன்னை பார்த்தா குறைஞ்சபட்சம் ஒரு சாமியார் மாதிரி கூட தெரியலை.

ஏன்? சாமியார்னா எப்படி இருக்கனும்?

சாமியார்னா எப்படி இருக்கனுமா? முதல்ல உன் பேர் என்னாய்யா?

சிவன்.

இதுலயே தெரியுது, நீ சாமியார் இல்லைன்னு.

எப்படி?

முதல்ல பேரு இவ்வளவு சுருக்கமா இருக்ககூடாது. சிவன்ங்கிறதுக்கு பதிலா, அட்லீஸ்ட், ஒரு "சிவானந்தா"ன்னு இருக்கனும்.

ஆனா என் பேரு வெறும் சிவன் தான்.

பேருலியே நீ காலி. சரி. அதை வுடு. அடுத்தது தலைமுடி, தாடியெல்லாம் இருக்கனும். அது இருக்காயா உனக்கு?

அதான் நீளமா தலைமுடி வெச்சிருக்கேனே?

அது எல்லா காலேஜ் பசங்களும் வைக்கிறதுதான். ஆனா தாடி எங்கேய்யா?

எனக்கு தாடி வைச்சு அவ்வளவா பழக்கமில்லை. எப்போவாவது மாறுவேஷத்துல திருவிளையாடல் நடத்தும்போது தாடி வைச்சதுண்டு.

இந்த கதையெல்லாம் வேணாம். சரி, அதையும் விடு. கையிலிருந்து விபூதி வரவழைக்க தெரியுமா உனக்கு?

முயற்சி பண்ணியதில்லை.

லிங்கம் வரவழைக்க தெரியுமா?

நானே அதை எதுக்கு வரவைக்கனும்?

நல்லா பேசுறய்யா. தெரியலைன்னா தெரியலைன்னு சொல்ல வேண்டியதுதானே? சரி அதையும் விடு. பக்தர்கள் நிறைய பேரு அவங்கவங்க குறைகளோடு வருவாங்க. ஹேண்டில் பண்ணத்தெரியுமா?

என்ன மாதிரி குறைகள்?

வியாபாரத்துல நஷ்டம்னு வருவாங்க. எப்படி ஹேண்டில் பண்ணுவே?

தோல்வியிலிருந்து பாடம் கத்துக்கோங்க. எது எப்படியிருந்தாலும் மனசை சுத்தமா வைச்சிக்கிட்டு நியாயமா வியாபாரம் பண்ணுங்க. கடைசிவரைக்கும் நல்ல செயல்கள் செய்து வாழ்ந்தா, எல்லாம் முடிஞ்சு 'மேல' வரும்போது நான் உங்களை கைவிடமாட்டேன்னு ஆசி சொல்லுவேன்.

என்னா? உன் பக்தர்களை ஒரேடியா மேலோகம் அனுப்பறதா முடிவா? என்னய்யா ஆசி அது? மேலோகத்துக்கு வந்தா கவனிச்சிக்குவேன்னு? இதுவே, எதிர்க்க இருக்கிற, எங்க சாமியாரு என்ன பண்ணுவாரு தெரியுமாய்யா?

என்ன பண்ணுவாரு?

வியாபாரத்தை பாதுகாக்க மந்திரம் சொல்வாரு. தாயத்து தருவாரு. எல்லாத்துக்கும் மேல, ஆசிரமத்துக்கு வர்ற மத்த வியாபாரிங்க கூட டீலிங் போட்டு தருவாரு. அரசியல்வாதிங்க கூட அறிமுகம் செய்வாரு. என்ன, ஆசிரமத்துக்கு கொஞ்சம் காணிக்கை தரவேண்டியிருக்கும் அவ்வளவுதான்.

ஓஹோ..!

என்ன ஓஹோ? இதுக்கே அசந்துட்டா எப்படி? சரி அதை வுடு. குடும்பத்துல பிரச்சினைன்னு பல பக்தர்கள் வருவாங்களே? அவங்களுக்கு என்ன சொல்லுவே?

மனசு விட்டு பேசி பிரச்சினையை தீர்த்துக்கோங்கன்னு சொல்லுவேன்.

சரியா போச்சு. நீ இந்த மாதிரி சொன்னா உன்னை ஒருத்தனும் சீண்ட மாட்டான். இதுவே எங்க சாமியாரா இருந்தா விபுதி வரவழைச்சு தருவாரு. கணவன் மனைவி பிரச்சினைன்னா, அந்தந்த மனைவிகளை நடுராத்திரியில தனியா வரவழைச்சு பூஜை பண்ணி தோஷத்தை நீக்கி அனுப்புவாரு.

உடனே தோஷம் நீங்கிடுமாக்கும்?

என்ன கிண்டலா? தோஷம் கண்டிப்பா நீங்கிடும். ரொம்ப காலமா அந்த பூஜையை பண்றாரு. அந்த பூஜைக்கப்புறம் பெண்கள் மனசுல ஒரு தனிவித அமைதி வந்துடும். மருண்டு மருண்டு பார்ப்பாங்க. ஆனா அமைதியாயிடுவாங்க. அதனால அவங்கவங்க குடும்பத்துலயும் அமைதி வந்துடும். அவ்வளவு சக்தி வாய்ந்த சாமியார் அவரு. ரொம்ப பெரிய்ய.. ஆங்..அது என்னது உன் நெத்தியில?

எது?

ஒரு கோடு போல வந்துட்டு போச்சே?

கோடா?

ஆமாம். மெல்லிசா ஒரு கோடு தெரிஞ்ச மாதிரி இருந்துச்சு. அது திடீர்னு ரெண்டா பிரிஞ்ச மாதிரி இருந்துச்சு. அதுக்கு உள்ளே கறுப்பு வெள்ளையா என்னவோ உருண்ட மாதிரி இருந்தது. என்னது அது? நெத்திச்சுருக்கமா?

இருக்கலாம். சில பேருடைய முட்டாள்தனத்தை பார்த்தா எனக்கு கோவம் வரும். கோவம் வந்துச்சுன்னா எனக்கு அந்த மாதிரி ஆகும். பல சமயம் அடக்கிக்குவேன். அது சரி, உங்க பொண்டாட்டிக்கு என்ன பிரச்சினை?

இப்ப என்னா? என்னை முட்டாள்ங்கிறயா?

அப்படி சொல்லலீங்க. ..அட.. இப்ப அதை விடுங்க. உங்க பொண்டாட்டிக்கு என்ன பிரச்சினை? அதை சொல்லுங்க.

எல்லாமே பிரச்சினை தான். முக்கியமா குழந்தை பாக்கியம் கிடையாது. அதுக்குதான் சாமியார்கிட்ட போன வாரம் வந்தோம். அவருதான் பரிகாரம் பண்ணனும், அடுத்த வாரம் உன் பொண்டாட்டியை அனுப்புன்னாரு. அதான் இன்னைக்கு என் பொண்டாட்டிய கூட்டி வந்து உள்ள அனுப்பியிருக்கிறேன்.

குழந்தைப்பிரச்சினைன்னா டாக்டரை பார்க்க வேண்டியதுதானே?

பார்த்தோம். அவளுக்கு உடம்புக்கு ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டாங்க.

சரி. உங்க உடம்பை காட்டினீங்களா?

யோவ். நான் எதுக்கு காட்டனும்? நான் ஆம்பிளை சிங்கம்யா. எனக்கு உடம்புக்கு ஒண்ணுமில்லைய்யா.

(முனுமுனுத்தபடி) ஆம்பிளைங்கிற ஆணவம்.

என்னய்யா முனுமுனுக்கிறே?

ஒண்ணுமில்லீங்க. அது சரி. இந்த சாமியாரை பார்க்கவர உங்க பொண்டாட்டி விருப்பப்பட்டுதான் ஒத்துக்கிட்டாங்களா?

அட அந்த கதையை ஏன் கேட்கிறே? முதல்ல இருந்தே அவளுக்கு இதுல தயக்கம் தான். "நாந்தான் நம்பூரு ஈஸ்வரன் கோயிலுக்கு தெனம் போயி வேண்டிக்கிறேனே, அப்புறம் எதுக்கு சாமியாரு அது இதுன்னு போகனும்னு" கேட்டா.

அப்புறம்?

"இல்லைடி இந்த சாமியாரு ரொம்ப நல்லவரு, அந்த ஆண்டவனே அவதாரம் எடுத்து அவரோட ரூபத்துல வந்திருக்காருன்னு எல்லோரும் சொல்றாங்க. அதனால நீ இந்த பூஜைக்கு ஒத்துதான் ஆகனும்னு" எவ்வளோவோ சொல்லிப்பார்த்தேன். அவ கேட்கிறமாதிரி தெரியலை. "நான் எனக்கு வேண்டியதை அந்த ஈஸ்வரன்கிட்டே கேட்டுக்கிறேன், எனக்கு சாமியாரும் வேண்டாம், பூஜையும் வேண்டாம்னு" ஒரே அடம் புடிச்சா.

அப்புறம்?

எனக்கு வந்த ஆத்திரத்தையெல்லாம் அடக்கிகிட்டு பொறுமையா சொன்னேன், "சரிடி. நம்ப பக்கத்து தெரு மாணிக்கமோட பொண்டாட்டி கூட போன மாசம் இதே பூஜைக்கு போயிட்டு வந்தா. அவகிட்டே போயி பேசிப்பாரு. அதுக்கப்புறம்தான் அந்த பூஜையோட மகிமை உனக்கு புரியும்ன்னு" சொல்லி அனுப்பினேன்.

அப்புறம்?

அவ என்னா சொன்னான்னு தெரியலை, அதுக்கப்புறம் இவ வரமாட்டேன்னு ரொம்பவே அடம் புடிக்க ஆரம்பிச்சுட்டா. "அந்த ஈஸ்வரன் மேல ஆணை, நான் அந்த பூஜைக்கு வரவே மாட்டேன்னு" சண்டை போட ஆரம்பிச்சுட்டா.

அப்புறம்?

விட்டேன் ஒரு அறை. "ஈஸ்வரன் முக்கியமா, நான் முக்கியமா? நான் முக்கியம்ன்னா வாயை மூடிகிட்டு பூஜைக்கு ஒத்துக்கோடி"ன்னேன். ஆனா அவ பதில் சொல்லாம என்னை பரிதாபமா பார்த்தா. திருப்பி ரெண்டு மூணு அறை விட்டேன். "சொல்லுடீன்னேன்" அதுக்கப்புறமா அவ, "அந்த ஈஸ்வரன் மேல பாரத்தை போட்டுட்டு ஒத்துக்கிறேன். என்னை அடிக்காதீங்கன்னு அழுதா". அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான்னு இதைத்தான் சொல்றாங்க போல.

(முனுமுனுத்தபடி) ஆமாமாம். ஆனா அந்த அடியோட பலனை நீ மேல வரும் போதில்லே அனுபவிப்பே.

என்னய்யா திரும்பியும் முனுமுனுக்கிறே?

இல்லை எனக்கு சில பேரை ஆபத்துலேர்ந்து காப்பாத்தனும். அதுக்கு என்னோட ஆளு ஒருத்தரு வரனும். அதான் அந்த ஆசிரமத்து வாயிலை பார்த்துகிட்டு இருக்கிறேன்.

என்னாய்யா ஆபத்து? (ஆசிரமத்து வாயிலை திரும்பி பார்த்தபடி) அங்க என்னாய்யா இருக்கு. ..அட. திடீர்னு எருமை மாதிரி ஒரு உருவம் வெளியே வந்து நின்ன மாதிரி இருந்துச்சே? நீ கவனிச்சியா?

(அவசரமா) என் ஆளு வந்தாச்சு. நான் போகனும் (எழுந்து போகிறார்)

யோவ். நில்லுய்யா, என்னய்யா சொல்றே?

(வேகமாக) ஒண்ணுமில்லே. நீ அந்த வாசலையே பாத்துகிட்டு நடக்கிறதை கவனி. உனக்கு இப்ப எதுவும் புரியாவிட்டாலும் பிறகு பொறுமையா புரியும். அப்ப நீ உன் பொண்டாட்டியை அடிக்கிறதை நிறுத்திடுவே. மத்தவங்க கிட்ட அன்பா நடந்துக்குவே. இப்ப நான் போகனும். (வேகமாக சென்று மறைகிறார்)

(அப்போது ஆசிரமத்திலிருந்து சிலபேர் தடதடவென வெளியே ஓடி வருகிறார்கள். அதில் ஒருவர் செல்·போனை காதில் வைத்து சத்தமாக பேசுகிறார்.அவர் கத்துவது தெளிவாக கேட்கிறது)

"ஹலோ. ஆசிரமத்துக்குள்ள சரியா சிக்னெல் கிடைக்கில. இப்போ சரியா கேட்குதா. சரி கேட்டுக்கோங்க. சாமியாருக்கு திடீர்னு மாரடைப்பு வந்துடுச்சு. ரொம்ப தீவிரமான மாரடைப்பு போல. பேச்சு, மூச்சு இல்லை. நாடியும் இல்லை. உயிர் போயிடுச்சுன்னுதான் எல்லாரும் சொல்றாங்க. நீங்க எதுக்கும் உடனே ஆம்புலென்ஸ் அனுப்புங்க. .. என்னது? லேட்டாவுமா? யோவ் உடனே அனுப்புய்யா? ..சரி.. எமெர்ஜென்ஸிய்யா.. சீக்கிறம் அனுப்புய்யா..

(பேச்சு காற்றில் கரைகிறது)

In Facebook

Comments